MR Radha Best Movies: 60களின் சினிமா கலாச்சாரத்தில் வில்லன் என்றால் கட்டு மஸ்தான உடலமைப்புடன் கத்தி சண்டை, கம்பு சண்டை போட வேண்டும் என்று இருந்த பொழுதே தன்னுடைய முகபாவனை மற்றும் கரகரப்பான குரல், கம்பீரமாக பேசும் வசனங்கள் மூலம் மிரட்டியவர் தான் நடிகர் எம் ஆர் ராதா. வில்லத்தனத்தையும் காமெடியாக, அசால்ட்டாக நடிக்கக்கூடிய இவருடைய நடிப்பில் இந்த ஆறு படங்கள் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டியது.
ரத்தக்கண்ணீர்: ரத்தக்கண்ணீர் படம் அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது. 1954 ஆம் ஆண்டிலேயே பல முற்போக்கான வசனங்களை பேச முடியும் என்றால் எம் ஆர் ராதாவுக்கு மட்டும் தான் அந்த தைரியம் இருந்திருக்கிறது. இந்த படத்தின் வசனங்கள் மேம்போக்காக பார்க்கும் பொழுது சிரிப்பு வர வைக்கும் விதமாகவும், ஆழ்ந்து கவனித்தால் சிந்திக்கும் விதமாகவும் இருக்கும்.
பலே பாண்டியா: நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகவேள் எம் ஆர் ராதா காம்போவில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம் தான் பலே பாண்டியா. இந்த படத்தில் இன்சூரன்ஸ் பணத்திற்காக சிவாஜியை கொலை செய்ய அவருடனே சுற்றும் கேங்ஸ்டர் ஆக ராதா நடித்திருப்பார். இந்த படத்தில் வரும் நீயே உனக்கு என்றும் நிகரானவன் பாடல் காட்சியில் சிவாஜி மற்றும் எம் ஆர் ராதா ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.
மணி ஓசை: எம் ஆர் ராதா மற்றும் முத்துராமன் இணைந்து நடித்த படம் தான் மணி ஓசை. இந்த படத்தில் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எம் ஆர் ராதா தனக்கு முதலில் பிறந்த குழந்தை ஊனமாக இருப்பதால் அந்த குழந்தையை அனாதையாக விட்டுவிட்டு அது இறந்து விட்டதாக மனைவியிடம் சொல்லிவிடுவார். இந்த பொய்யை சுற்றி தான் இந்த படம் முழுக்க அமைந்து இருக்கும்.
சித்தி: எம் ஆர் ராதா மற்றும் பத்மினியின் சிறந்த நடிப்பில் வெளியான படம் தான் சித்தி. செல்வந்தர் ஆன எம் ஆர் ராதா தன்னைவிட வயது குறைந்த பத்மினியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதும், அதன் பின்னர் பத்மினி அவருடைய குழந்தைகளுக்காகவே தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்வதும், வழக்கமான எம் ஆர் ராதாவின் நகைச்சுவை காட்சிகளுடன் அமைந்த படம் தான் இது.
பாகப்பிரிவினை : நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படம் தான் பாகப்பிரிவினை. இந்த படத்தில் எம் ஆர் ராதா சிங்கப்பூர் சிங்காரமாக நடித்திருப்பார். ஏற்கனவே சொந்த பிரச்சனையால் சிதைந்திருக்கும் குடும்பத்தில் தன்னால் முடிந்த அளவு வில்லத்தனத்தை செய்யும் கேரக்டர் தான் இவருக்கு. இந்த படம் தேசிய விருது பெற்றது.
நல்ல இடத்து சம்மந்தம்: எம் ஆர் ராதாவுக்கு ரத்தக்கண்ணீர் படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இன்று வரை அவருடைய அடையாளமாகவும் இருக்கிறது. ஆனால் இந்த படத்திற்கு பிறகு ராதாவுக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. பட வாய்ப்புக்காக அலைந்து திரிந்து கொண்டிருந்தவருக்கு வி.கே. ராமசாமி கொடுத்த வாய்ப்பு தான் நல்ல இடத்து சம்மந்தம். இந்த படத்திற்கு பிறகு தான் அவருக்கு சினிமாவில் திருப்புமுனை ஏற்பட்டது.