ஒரு திரைப்படம் முழுமையாக முடிக்கப்பட்டு, கலர் கரெக்ஷன், சப்-டைட்டில் என அனைத்தும் தயார் நிலையில் இருக்கும்போது, அதன் தரவு கசிவது என்பது தயாரிப்பாளருக்குப் மிகப்பெரிய பேரிடியாகும். பொதுவாக, எடிட்டிங், டப்பிங், பிஜிஎம், சிஜிஐ எனப் பல நிலைகளைக் கடந்து, இறுதிக் கட்டத்தில்தான் மாஸ்டரிங் நடக்கும். மிகக் குறைந்த நபர்களுக்கே அணுகல் இருக்கும் நிலையில், இது போன்ற கசிவுகள் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பெரிய திரையில் பார்ப்பது ஒரு தனி அனுபவம் என்றாலும், படத்தின் கதையும் சுவாரசியமும் முன்கூட்டியே தெரிந்துவிட்டால், ரசிகர்களின் ஆர்வம் குறைந்துவிடும். முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதே, ஒரு ரகசியத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில்தான். டெலிகிராம் போன்ற தளங்களில் படம் கிடைப்பதால், அந்த வேகம் குறைகிறது.
ஒப்பந்தங்களின்படி, திருட்டுத்தனமாக படம் வெளியாவதைத் தடுப்பது தயாரிப்பாளரின் பொறுப்பு. இது ஓடிடி வருவாயையும் சட்டரீதியாக பாதிக்கலாம். தலைவா போன்ற திரைப்படங்கள் வெளியான சமயத்தில், திருட்டு விசிடி-களால் அதன் வணிகம் எவ்வளவு பாதிக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்.
இயக்குநர் அமீர் எழுப்பியுள்ள கேள்வி நேர்மையானது. ஒரு சமூகத்திற்காக அல்லது சிறுபான்மையினருக்காக அரசியல் பேசும்போது, அவர்களைத் திரையிலும் சரியான முறையில் சித்தரிக்க வேண்டியது அவசியம். சமூக வலைதளங்களில் பரவிய காட்சிகளை வைத்து அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு வலுவான ஐடி குழுவைக் கொண்டு சிபிஐ விசாரணை நடத்தி இந்தக் கசிவின் மூலத்தைக் கண்டறிய வேண்டும். தயாரிப்பாளர்கள் தாங்கள் பணிபுரியும் ஸ்டுடியோக்களில், வேலை முடிந்ததும் தரவுகளை முறையாக அழிப்பதையும், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு, ரசிகர்களுக்காகவும் தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் விஜய் ஒரு பிரம்மாண்டமான கமர்ஷியல் படத்தை ஈடாக வழங்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது என தயாரிப்பாளர் தனஞ்சயன் கூறி உள்ளார்.