இப்படியும் ஒரு உலகம் இருக்குமா என்று நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அவதார். புது டெக்னாலஜியுடன் வித்தியாசமான மனிதர்களை அறிமுகப்படுத்திய அந்த திரைப்படம் உலக அளவில் கவனம் ஈர்த்தது. அதை தொடர்ந்து ரசிகர்களின் 13 ஆண்டு கால காத்திருப்புக்கு பலனாக தற்போது அவதார் 2 வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான ட்ரெய்லர் பலரின் எதிர்பார்ப்பையும் தூண்டிய நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஒட்டுமொத்த மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் விமர்சனத்தை பார்ப்பதற்கு முன்பு முதல் பாகத்தின் கதை என்ன என்று கொஞ்சம் திருப்பிப் பார்ப்போம். முதல் பகுதியில் ராணுவத்தில் வேலை செய்யும் ஹீரோ பண்டோரா மக்களை அழிப்பதற்காக அனுப்பப்படுவார்.
அங்கு அவர்களுடன் பழகும் ஹீரோ அந்த மக்களை காப்பாற்றுவதற்காக மிலிட்டரிக்கு எதிராக திரும்புவார். அந்தப் போராட்டத்தில் வில்லன் அழிக்கப்படுவார். இதுதான் முதல் பாதியின் கதை சுருக்கம். அதன் தொடர்ச்சியாக இப்போது இரண்டாம் பாதியில் ஹீரோ திருமணம் ஆகி மனைவி, குழந்தை குட்டிகளுடன் வாழ்ந்து வருகிறார். அந்த மகிழ்ச்சியை கெடுப்பதற்காகவே வில்லன் மீண்டும் வருகிறார்.
முதல் பாதியில் ஹீரோவால் கொல்லப்பட்ட வில்லன் மரபணு முறையில் மீண்டும் உருவாக்கப்பட்டு பழிவாங்க வருகிறார். அவரிடமிருந்து ஹீரோ தன் குடும்பத்தையும் மக்களையும் காப்பதற்காக கடல் சார்ந்த பகுதிக்கு தன் இனத்துடன் செல்கிறார். ஆனால் அங்கும் வில்லன் வந்து விடுகிறார். அதன் பிறகு நடந்த போராட்டத்தில் என்ன நடந்தது என்பதுதான் இந்த இரண்டாம் பாகத்தின் கதை.
13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை மக்கள் இவ்வளவு ஆர்வத்துடன் எதிர்பார்த்ததற்கு சரியான பலனும் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் ரசிகர்களின் இத்தனை வருட எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் இந்த திரைப்படம் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மிக்க வைத்திருக்கிறது. அதிலும் நீல மனிதர்களின் மாயாஜால உலகத்தையும் சாகசங்களையும் பார்ப்பதற்கு புதிதாக கண்கள் உருவாக வேண்டும்.
அந்த அளவுக்கு இந்த திரைப்படத்தின் விஷுவல் எபெக்ட் மிரள வைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் முழுக்க முழுக்க கடல் பகுதியில் நடக்கும் கதை என்பதால் வாட்டர் அமுஸ்மெண்ட் பார்க் சென்று வந்த ஃபீல் ரசிகர்களுக்கு இருக்கிறது. இப்படி படத்தில் அனைத்தும் நிறைவாக இருந்தாலும் படத்தின் நீளம் 3.15 மணி நேரமாக இருப்பது கொஞ்சம் சலிப்பை கொடுத்துள்ளது. மற்றபடி படம் முடிந்தும் கூட அந்த புது உலகத்தில் இருந்து ரசிகர்களால் வெளியே வர முடியவில்லை என்பதே நிதர்சனம்.
மேலும் ஜேம்ஸ் கேமரூன் இந்த படத்தின் மூலம் தன்னுடைய முந்தைய அவதார் படத்தின் சாதனையை முறியடித்து இருக்கிறார். ஏனென்றால் இப்போது இந்த திரைப்படம் கோடி கணக்கில் வசூலை வாரி குவித்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்தின் அதிக வசூல் பெற்ற திரைப்படங்களில் இப்படம் தான் முதலிடம் வகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆக மொத்தம் இந்த அவதார் நீல நிற மனிதர்களின் விஷுவல் ட்ரீட்டாக ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.