கேஜிஎஃப் பட நிறுவன தயாரிப்பில் வெற்றி பெற்ற கந்தாரா.. தமிழில் வெளியான ட்ரைலர்

சமீபகாலமாக கன்னடத் திரையுலகில் எடுக்கப்பட்டு வரும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. அந்த வகையில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளிவந்த கேஜிஎஃப் திரைப்படம் உலக அளவில் பல சாதனைகள் படைத்தது.

இது கன்னடத் திரையுலகிற்கும் மிகப்பெரிய பெருமையை தேடி கொடுத்தது. அந்த வரிசையில் லேட்டஸ்ட் ஆக இணைந்திருக்கும் படம் தான் கந்தாரா. ரிஷப் செட்டி இயக்கி, நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து சப்தமி கௌடா, கிஷோர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். கே ஜி எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹோம்பெல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

கடந்த வாரம் வெளிவந்த இந்த திரைப்படம் பல பாசிட்டிவ் விமர்சனங்களால் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கன்னட திரையுலகில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படம் மற்றும் மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் ரிஷப் செட்டியின் இயக்கத்தையும், நடிப்பையும் பாராட்டி வருகின்றனர்.

கதைப்படி அளவுக்கு அதிகமான சொத்துடன் இருக்கும் பண்ணையார் ஒருவர் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார். அப்போது மலை கிராமத்திற்கு செல்லும் அவர் அங்கு அம்மக்கள் ஒரு கடவுளை வழிபடுவதை பார்க்கிறார். அந்தக் கடவுள் மூலம் தனக்கு நல்லது நடக்கும் என்று நம்பும் பண்ணையார் மக்களிடம் சில நிலங்களை கொடுத்து அந்த கடவுளை பெற்றுக்கொள்கிறார்.

அதன் பிறகு அவருடைய சந்ததிகள் இந்த நில விஷயத்தை கேள்விப்பட்டு மலை கிராம மக்களிடம் அதை அபகரிக்க திட்டமிடுகின்றனர். அந்த சூழ்நிலையில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக ஹீரோ வருகிறார். இந்த முயற்சியில் ஹீரோ வெற்றி பெற்றாரா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை. கதையை கேட்கும் போதே மிகவும் சாதாரணமாக தான் இருக்கிறது.

ஆனால் அந்த கதையை காட்சிப்படுத்தியிருந்த விதமும், பின்னணி இசையும், அதிரடி சண்டை காட்சிகளும் படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது. அதிலும் ரிஷப் செட்டியின் நடிப்பு படு மிரட்டலாக இருக்கிறது. வெறித்தனமாக சண்டையிடுவதில் இருந்து செண்டிமெண்ட், ரொமான்ஸ் போன்ற அனைத்து காட்சிகளிலும் மனுஷன் வெறித்தனமாக நடித்திருக்கிறார்.

இதுதான் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. மேலும் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையும், அவர்களின் வேட்டை தொழில் போன்றவை சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் கம்பளா என்ற எருமை மாட்டுப் போட்டி நடக்கும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. இதில் முக்கியமானது படத்தில் எந்த தேவையில்லாத காட்சிகளும் கிடையாது.

ஒவ்வொரு காட்சிகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது போல் இருப்பது மிகப்பெரிய பலம். படத்தின் கடைசி 20 நிமிட காட்சிகள் ரசிகர்களை பரப்பரப்புடன் சீட்டின் நுனியில் அமர வைக்கிறது. ஆக மொத்தம் எதார்த்தமான கதையை இப்படி ஒரு கோணத்திலும் காட்சிப்படுத்த முடியும் என்பதை இந்த படம் ஆணித்தரமாக சொல்லி இருக்கிறது. அந்த வகையில் இந்த கந்தாரா ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்துள்ளது. கந்தாரா படத்தின் டிரைலர் தமிழில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →