உடல் பிரச்சினையால் சினிமாவுக்கு பிரேக் எடுத்த வடிவேலு.. அதை வைத்தே வெற்றி பெற்ற இயக்குனர்

ஆரம்பகால கட்டத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்த வடிவேலுவை ராசாவின் மனசிலே திரைப்படம் ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது. அதைத்தொடர்ந்து விஜயகாந்த் உடன் அவர் நடித்த சின்ன கவுண்டர் திரைப்படம் தான் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கான அடித்தளம் இட்டது.

இதற்கு விஜயகாந்த் ஒரு முக்கிய காரணம் என்பதை நம்மால் மறுக்க முடியாது. அதன் பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து முன்னணி காமெடியனாக உயர்ந்த வடிவேலுவுக்கு சில காலங்கள் வாய்ப்பில்லாமல் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அவருடைய உடல் நல பிரச்சனை தான்.

கடந்த 2003ஆம் ஆண்டு வடிவேலுவுக்கு காலில் அடிபட்டு நடப்பதற்கு சிரமப்பட்டு கொண்டிருந்தார். அதனால் எந்த படத்திலும் அவர் நடிக்காமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்படி மீறி வரும் வாய்ப்புகளையும் அவர் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். அப்போதுதான் சுந்தர் சி அவரை வின்னர் படத்தில் நடிக்குமாறு கேட்டிருக்கிறார்.

உடனே வடிவேலு தன்னுடைய நிலையை எடுத்துக் கூறி தன்னால் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். மேலும் 6 மாத காலம் வரை நான் ரெஸ்ட் எடுத்தே ஆக வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் சுந்தர் சி நீங்கள் இப்போது கஷ்டப்பட்டு நடப்பதை படத்திலும் செய்யுங்கள். இது வேற லெவலில் வொர்க் அவுட் ஆகும் என்று கூறி தைரியம் சொல்லி இருக்கிறார்.

அதன் பிறகு உருவானது தான் கைப்புள்ள கதாபாத்திரம். அந்த வகையில் பிரசாந்த், வடிவேலு கூட்டணியில் வெளிவந்த அந்தத் திரைப்படம் அப்போது சக்கை போடு போட்டது. அது மட்டுமல்லாமல் வடிவேலுவின் அந்த கதாபாத்திரம் இப்போதும் கூட ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம். அதிலும் அப்படத்தில் வடிவேலுவின் நடையை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்காத ரசிகர்களே கிடையாது.

இவ்வாறு சூப்பர் ஹிட் ஆன அந்த திரைப்படத்திற்கு பிறகு வடிவேலுவுக்கு வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்க ஆரம்பித்தது. அந்த வகையில் வடிவேலுவுக்கு பல திரைப்படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தாலும் இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பது இந்த கைப்புள்ள கதாபாத்திரம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →