Vithaikaaran Teaser: காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்படும் வகையில் இப்போது அனைத்து நகைச்சுவை நடிகர்களும் ஹீரோவாக களம் கண்டு வருகின்றனர். அதில் நகைச்சுவையில் மிகப்பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திய சந்தானம் இப்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரை தொடர்ந்து சூரி, யோகி பாபு என அனைவரும் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் இப்போது சதீஷும் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஏற்கனவே நாய் சேகர் படத்தில் ஹீரோவாக கலக்கிய இவர் வித்தைக்காரன் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். வெங்கி இயக்கத்தில் விஜய் பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
படத்தின் பெயரை கேட்டதுமே நம்மால் யூகிக்க முடிகிறது இது ஒரு மேஜிக் சம்பந்தப்பட்ட படம் என்று. அதைப்போல சதீஷ் இதில் ஒரு மேஜிக் மேனாக வருகிறார். அதன்படி டீசரின் ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. அதாவது உலகத்திலேயே தான் ஏமாறுறோம்னு தெரிஞ்சும் சிரிச்சு சந்தோஷமா காசு தராங்கன்னா அது மேஜிக் மேனுக்கு மட்டும் தான் என்ற வசனத்தோடு தொடங்குகிறது.
அதைத்தொடர்ந்து ஏமாறுவது தான் தப்பு ஏமாற்றுவது தப்பு இல்ல போன்ற வசனங்கள் படத்தின் கதையை உணர்த்துகிறது. அதன்படி சதீஷ் ஒரு மேஜிக் மேனாக மட்டுமல்லாமல் திருடனாகவும் காட்டப்படுகிறார். அதிலும் ஏர்போர்ட் லாக்கர் மட்டுமல்லாமல் பறக்கிற ஏரோபிளேன்ல கூட இவன் கொள்ளையடிப்பான் என்ற வசனங்கள் பட்டையை கிளப்புகிறது.
அந்த வகையில் வைரம், வில்லன் கோஷ்டி, கடத்தல் என நகரும் இந்த டீசருக்கு இப்போது நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. அதிலும் சதீஷ் சந்தானத்தை மிஞ்சும் வகையில் புது அவதாரம் எடுத்திருக்கிறார் என்றும் இந்த ஹீரோயிசம் நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும் எனவும் ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.