கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கும்,தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்கும் இடையிலான சர்ச்சை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆட்சியருக்கு ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதுடன்,அவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாகவும் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.மேலும், அவரது அரசு இல்லத்திற்குள் அத்துமீற முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்தக் குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் மறுத்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.குறிப்பாக,திமுக சார்பில் காவல்துறை டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டு,சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.மேலும்,தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு,தமிழக காவல்துறையிடம் விளக்கம் கோரியது.
இதற்கிடையே,நவம்பர் 23ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது,மாவட்ட ஆட்சியரிடமிருந்து புகார் வரவில்லை என்று அரசு தரப்பு தெரிவித்தது.ஆனால்,அதே நாளில் பிற்பகல் மாவட்ட ஆட்சியர் பத்மஜா,மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அருள் விக்னேஷுக்கு எதிராக எழுத்துப்பூர்வமான புகார் அளித்ததாகத் தகவல்கள் வெளியாகின.இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில்,திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி,துணிச்சலுடன் புகார் அளித்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டியுள்ளார்.பணியிடங்களில் அத்துமீறல்களைச் சகித்துக்கொள்ளும் பெண்களுக்கு அவர் முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும்,தனது கட்சி எம்எல்ஏ மீது முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா?என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் மேலும் கவனம் பெற்றுள்ளது.




