சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை புரிந்த ஆர்.ஆர்.ஆர்., புஷ்பா, கே.ஜி.எஃப் படங்களின் வெற்றி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இவை அனைத்தும் ஹிந்தி மார்க்கெட்டில் வசூலை அள்ளியுள்ளது, தற்போது ஒரு கேள்வியை தமிழ் சினிமாவை நோக்கி வைத்துள்ளது, நிறைய ஊடகவியலாளர்கள் தமிழில் மட்டும் ஏன் இது போன்ற படங்கள் வரவில்லை என சினிமாவில் இருப்பவர்களை நோக்கி எழுப்பியுள்ளனர்.
சமீபத்தில் வெளியான யாஷின் கே.ஜி.எஃப் 2 படம் தமிழ்நாட்டிலேயே விஜயின் பீஸ்டை வசூலில் முந்தி விட்டதாகவும் பரவலாக கூறப்பட்டு வருகிறது. இதனால் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வருவதில்லை, தமிழ் சினிமா அழிந்து வருகிறது என பல்வேறான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இது சினிமா பிரபலங்களிடமிருந்தே இரு வெவ்வேறான கருத்துக்களை பெற்று வருகிறது. சிலர் இதற்கு ஆதரவாகவும், சிலர் இந்த கூற்றை எதிர்த்தும் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் தயாரிப்பாளர் சி.வி.குமார் டிவிட்டரில் பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தமிழில் வெளியான பல நல்ல படங்களை உதாரணமாக கூறி இவை அனைத்தையும் விட கம்ர்ஷியல் படமான கே.ஜி.எஃப் தான் சிறந்தது என நீங்கள் கூறினால் விட்டுவிடுங்கள் தமிழ் சினிமா நன்றாகவே உள்ளது என பதிவிட்டுள்ளார். மேலும் “கே.ஜி.எஃப் நல்ல படம் தான், ஆனால் தமிழிலுள்ள சிறந்த கதையம்சம் கொண்ட படங்களுக்கு இணையாகாது, இது என்னுடைய கருத்து” என பதிவிட்டுள்ளார்.
முள்ளும் மலரும், காதலிக்க நேரமில்லை, கல்யாண பரிசு, போன்ற நல்ல படங்கள் இங்குள்ளன என்றும் அண்மையில் வெளியான ஆடுகளம், சூது கவ்வும், முண்டாசுப்பட்டி, தீரன் அதிகாரம் ஒன்று, கககபோ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், சதுரங்க வேட்டை, இறுதிச்சுற்று, வடசென்னை, ராட்சசன், சார்ப்பேட்டா பரம்பரை, அசுரன், பரியேரும் பெருமாள், கைதி, ஜெய் பீம், டாணாக்காரன் போன்ற படங்களை அவர் மேற்கொள் காட்டியுள்ளார்.
உண்மையில் கே.ஜி.எஃப் 2 படம் சிறந்த படம் என்றாலும், அது மேக்கிங்கில் மிக சிறப்பான படம் தான். ஆனால் கதையாக பார்த்தால் சாதாரணமான கதையை தான் கொண்டுள்ளது. அடிப்படையில் நாம் முன்பு சிறந்த கதையும் மேக்கிங்கும் கொண்ட படங்களை நிராகரித்து விட்டோம், அதுவே நம்முடைய நடிகர்களையும், இயக்குனர்களையும் வெறும் கமர்ஷியல் படங்களை செய்ய தூண்டியிருக்கிறது.
இப்போது கொண்டாடப்படும் ஆர்.ஆர்.ஆர், பாகுபலி, கே.ஜி.எஃப் படத்திற்கு இணையாக தமிழில் 2010ஆம் ஆண்டே ஆயிரத்தில் ஒருவன் படத்தை தயாரித்திருந்தனர். ஆனால் அந்த படத்தின் தோல்வி பின்னர் அவ்வாறான படங்கள் பின்நாளில் உருவாக தடையாகி போனது. ஆயிரத்தில் ஒருவன் மட்டுமின்றி ஆளவந்தான், ஹே ராம், அன்பே சிவம் போன்ற நிறைய படங்களை இப்போது கொண்டாடுகிறோமே தவிர வெளியான போது வணிக ரீதியாக இவையாவும் மிகப்பெரிய தோல்வி படங்களாக அமைந்தன.