Pechi Movie Review: பேய் சீசனை மீண்டும் ஆரம்பித்த புண்ணியம் அரண்மனை 4ஐ தான் சேரும். இடையில் ஆக்ஷன், ரத்தம், வன்முறை போன்ற மசாலா படங்களால் நொந்து போன ரசிகர்களுக்கு செம ட்ரீட் ஆக வெளிவந்திருக்கிறது பேச்சி.
ராமச்சந்திரன் இயக்கத்தில் காயத்ரி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் திகில் விரும்பிகளுக்கு ஏற்ற படமா என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம். பேய் படம் என்றாலே இருட்டு தான் முக்கிய விஷயமாக இருக்கும்.
கதைக்களம்
ஆனால் பேச்சி அதிலிருந்து மாறுபட்டு புதுவித அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுத்திருக்கிறது. கதைப்படி ஐந்து நண்பர்கள் கூட்டம் மலை கிராமத்திற்கு ட்ரக்கிங் வருகிறார்கள். அங்கு வன ஊழியராக இருக்கும் பால சரவணன் இவர்களுக்கு வழிகாட்டியாக செல்கிறார். ஆனால் அந்த காட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி தடை செய்யப்பட்ட இடமாக இருக்கிறது.
அங்கு போகக்கூடாது என எச்சரிக்கும் பால சரவணனை மீறி நண்பர்கள் அங்கு செல்கிறார்கள். இதனால் ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் அவர்கள் தப்பித்தார்களா? பேச்சியின் ஆட்டம் எதற்காக? பேச்சி யார்? தன்னை நம்பியவர்களை பால சரவணன் காப்பாற்றினாரா? போன்ற பல கேள்விகளுக்கு திகிலுடன் விடையளிக்கிறது இப்படம்.
நிறை குறைகள்
பேய் படங்கள் என்றாலே வீட்டுக்குள் சுற்றும் பேய், இருட்டு நேரம் என சில எழுதப்படாத ரூல்ஸ் இருக்கிறது. ஆனால் அதெல்லாம் கிடையாது என பகல் நேரத்திலேயே ரசிகர்களை மிரள விட்டிருக்கிறார் இயக்குனர். இதற்காகவே அவருக்கு ஒரு தனி சபாஷ் போடலாம்.
அதேபோல் கேமரா கோணமும் அவ்வளவு சிறப்பாக இருக்கிறது. பயத்தை ஏற்படுத்தக்கூடிய பின்னணி இசை திக் திக் அனுபவம். முதல் பாதி மெதுவாக ஆரம்பித்த நிலையில் இரண்டாம் பாதி கதையோடு ஒன்றை வைத்து விடுகிறது.
பேச்சி யார் என்று காட்டிய விதமும் அந்த ஃப்ளாஷ் பேக் அனைத்தும் கதையின் பலம். பேயாக நடித்திருக்கும் அந்த நபர் நிச்சயம் ஆடியன்ஸுக்கான சர்ப்ரைஸ் தான். அதைத் தாண்டி நண்பர்கள் கூட்டத்தில் ஒருவராக இருக்கும் காயத்ரி சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இறுதிக்காட்சியில் பேயை விட பயங்கரமாக அவர் கொடுக்கும் பர்பாமன்ஸ் வேற லெவலில் இருக்கிறது. அதேபோல் பாலசரவணன் காமெடியன் என்பதை தாண்டி இதில் நடிப்பில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
மேலும் அந்த வனப்பகுதிகளும் ரசிகர்களுக்கு புதுமையான லொகேஷனாக இருக்கிறது. விறுவிறுப்பு திருப்புமுனை என புது அனுபவத்தை கொடுத்திருக்கும் இந்த பேச்சி திகில் விரும்பிகளுக்கு ஏற்ற படமாக இருக்கிறது. அதனால் தாராளமாக இதை தியேட்டரில் பார்க்கலாம்.
சினிமா பேட்டை ரேட்டிங்: ⅗
சீட்டின் நுனிக்கு வர வைத்து பயம் காட்டும் பேச்சி
- நடுக்கடலில் நடக்கும் மரண போராட்டம்
- மொட்டை தலை ராயனாக ஜெயித்தாரா தனுஷ்.?
- வீக் என்டில் குடும்பத்துடன் பார்க்க தரமான வெப் சீரிஸ்