சினிமாவை பொறுத்தவரை ஒருவருக்கு வெற்றி என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. அதற்கு பல கடுமையான முயற்சிகளும், உழைப்பும் நிறைய கொடுக்க வேண்டும். அப்படி மிகவும் கஷ்டப்பட்டு இன்று ஒரு முன்னணி இயக்குனராக உயர்ந்திருப்பவர் தான் வெற்றிமாறன்.
இவர் தனுஷுக்காக நிறைய வெற்றிப் படங்களை கொடுத்து இருக்கிறார். தனுஷின் திரை வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் அதில் வெற்றிமாறனுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. இவர்களின் கூட்டணியில் உருவான ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற பல திரைப்படங்கள் தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.
பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தான் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பிருந்தே இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நட்பு இருந்தது. எப்படி என்றால் வெற்றிமாறன் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.
அந்தவகையில் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் உருவான அது ஒரு கனாக் காலம் என்ற திரைப்படத்தில் வெற்றிமாறனும் பணியாற்றியிருக்கிறார். இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் பிரியாமணி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அப்பட ஷூட்டிங்கின்போது வெற்றிமாறன் தனுஷ் இடம் ஒரு கதையைக் கூறியிருக்கிறார்.
அந்த கதையை கேட்டு மிகவும் பிடித்துப் போன தனுஷ் நிச்சயம் இந்த படத்தை நாம் செய்யலாம் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு அந்த படத்தின் ஷூட்டிங்கும் ஆரம்பிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை 47 என்று படத்திற்கு பெயரும் வைக்கப்பட்டது. தன்னுடைய முதல் படத்தை மிகக்கூடிய கனவுடன் ஆரம்பித்தார் வெற்றி மாறன்.
ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை இரண்டு நாட்களிலேயே படப்பிடிப்பு நின்று போனது. முதல் படமே இப்படி பாதியிலேயே முடிவடைந்ததை எண்ணி வெற்றிமாறன் கடும் துயரத்தில் கண் கலங்கி நின்றுள்ளார். அதன் பிறகு சிறிது கால இடைவெளியில் அவர் மீண்டும் தனுஷை வைத்து பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கி இன்று ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.