ஜகமே தந்திரம், மாறன் என இரண்டு படங்களும் தோல்வியடைந்ததால் தற்போது ஒரு படத்தின் வெற்றியை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். இந்த நிலையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு தனது அண்ணனும் பிரபல இயக்குனருமான செல்வராகவனுடன் இணைந்து “நானே வருவேன்” படத்தில் நடித்து வருகிறார்.
அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களின் கவனத்தையும், எதிர்ப்பார்ப்பையும் இந்த படம் ஈர்த்துள்ளது. மயக்கம் என்ன படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கிய படங்களும் பெரிதாக எடுபடாததால் அவரும் ஒரு நல்ல வெற்றியை எதிர்நோக்கி உள்ளார். இந்த படத்தில் தனுஷுடன் பிரபு, யோகி பாபு, இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோருடன் ஸ்வீடன் நாட்டு நடிகையான எல்லி அவ்ரமும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் தனது பங்கினை நிறைவு செய்துள்ளார் எல்லி அவ்ரம்.
இது குறித்து அவர், நான் இதற்கு முன் பாரிஸ் பாரிஸில் படத்தில் நடித்திருந்தாலும் அந்த படம் இன்னமும் வெளிவராததால், இதுவே தமிழில் நான் அறிமுகமாகும் படம். மேலும் தனுஷ், செல்வராகவன் சார் மற்றும் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் போன்ற திறமையானவர்களுடன் பணியாற்றுவது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்காத ஒன்று. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன், ”என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இன்ஸ்டாகிராமில் அவர் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு கூறுகையில், இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் நடிகர் தனுஷ் பழகுவதற்கு மிகவும் பண்பானவர், எளிமையான குணமுடையவர், அவருடன் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சில ஹிந்தி படங்களில் தலை காட்டியுள்ள எல்லி அவ்ரம், ஹிந்தியில் 2013ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அங்குள்ள ரசிகர்களுக்கு பரிட்சயமானார். சில ஸ்வீடன் நாட்டு படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார்.
நானே வருவேன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்து வருகிறார். தாணுவும் தனுஷூம் இணைந்து பணியாற்றும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.