Captain Miller Movie Review: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் வெறித்தனமான நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று வருட உழைப்பின் பலனாக வெளிவந்துள்ள இப்படம் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
வஞ்சகம், சுயநலம் நடுவில் நடக்கும் இந்த கதையில் தனுஷ் ஆதிக்க அராஜகத்தை எதிர்த்து போராடும் கேப்டன் மில்லராக தெறிக்க வைத்துள்ளார். ஈசனாக அறிமுகமாகும் இவர் அந்த ஊர் ராஜாவின் ஆதிக்கத்தை விரும்பாதவர். கோவிலுக்கு அருகில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்கு வரக்கூடாது என ராஜா ஜெயபிரகாஷ் அதிகாரம் செய்கிறார்.
இது பிடிக்காத தனுஷ் பட்டாளத்தில் வேலைக்கு சேர்கிறார். ஆனால் அங்கு ஆங்கிலேயர்களுக்காக இந்தியர்களைக் கொல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்த குற்ற உணர்வில் ஊர் திரும்பும் இவரை கிராம மக்கள் ஒதுக்கி வைக்கின்றனர். அதை தொடர்ந்து போராளியாக இருக்கும் தனுஷின் அண்ணன் சிவராஜ்குமார் தன் படையில் அவரை சேர்க்கிறார்.
Also read: தனுஷின் 3 வருட தியாகம்.. கேப்டன் மில்லர் எப்படி இருக்கு.? வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்
அப்போது தனுஷ் சுயநலமாக செய்யும் ஒரு விஷயம் கிராம மக்களுக்கு ஆபத்தாக முடிகிறது. இதனால் ஆங்கிலேயர் அவர்களை சுற்றி வளைக்கின்றனர். அதிலிருந்து தன் மக்களை தனுஷ் காப்பாற்றினாரா? அவர் கேப்டன் மில்லராக உருவெடுத்தது எப்படி? என்பது தான் படத்தின் கதை.
தற்போது முதல் பாகம் வெளியாகி இருக்கும் நிலையில் அடுத்தடுத்து இரண்டு பாகங்கள் வெளிவர இருக்கிறது. அதில் தான் கேப்டன் மில்லரின் முழு சரித்திரமும் நமக்கு தெரியும். ஆனால் இந்த முதல் பாகத்திலேயே அதற்கான குறிப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர். வழக்கம்போல தனுஷ் நடிப்பு அரக்கனாக மாறி மிரட்டி இருக்கிறார்.
ஒவ்வொரு காட்சிகளிலும் அவர் காட்டும் வெறித்தனத்தை பார்க்கும் போது இப்படியும் கூட நடிப்பை காதலிக்க முடியுமா? என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு திறமை புல்லரிக்க வைத்திருக்கிறது. அதேபோன்று வசனங்களும் ஃபயராக இருக்கிறது. தனுசுக்கு அடுத்தபடியாக ஜிவி பிரகாஷின் இசை படத்தை தாங்கி பிடிக்கிறது.
துப்பாக்கி சத்தம், வெடிகுண்டு என பின்னணி இசை காதை துளைக்கிறது. இது கொஞ்சம் அதிகப்படியாக இருந்தாலும் கதையோடு நம்மால் பயணிக்க முடிகிறது. அதேபோல் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் சந்திப் கிஷன், நிவேதா சதீஷ் ஆகியோர் தங்கள் கதாபாத்திர முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
மேக்கிங், நடிப்பு, சண்டை காட்சிகள் என அனைத்தும் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்த நிலையில் ஆர்ட் இயக்குனரின் பணியையும் பாராட்டியே ஆக வேண்டும். இப்படி படத்தில் நிறைகள் பல இருந்தாலும் சில இடங்களில் வேகம் குறைந்தது போல் இருப்பது பெரிய மைனஸ். ஆனாலும் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடும் வகையில் தனுஷ் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி பிடித்து இருக்கிறார். ஆக மொத்தம் கேப்டன் மில்லர்-கில்லர்.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3.5/5