Director K Balachander: இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு உலகநாயகன் மற்றும் சூப்பர் ஸ்டார் என்ற இரண்டு பெரிய நட்சத்திரங்களை கொடுத்தவர். நாயகர்களுக்காக மட்டுமே படம் எடுத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில் தன்னுடைய கதாநாயகிகளை ஒவ்வொரு படத்திலும் பெண்ணியம் பேச வைத்தவர் இவர். பாலச்சந்தரின் ஹீரோயின்கள் எப்போதுமே மரத்தைச் சுற்றி டூயட் பாடிக்கொண்டு, காதல் காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படவில்லை. தங்களின் உரிமைகளுக்கு ஆதரவாகவும், தங்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும் சத்தமாக குரல் கொடுத்தவர்கள். அவருடைய இயக்கத்தில் இந்த ஆறு படங்கள் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டியவை.
அரங்கேற்றம்: 70 களின் காலகட்டத்தில் இப்படி ஒரு படம் எடுப்பதற்கே ஒரு இயக்குனருக்கு தனிப்பட்ட தைரியம் வேண்டும். இந்த படம் தமிழ்நாட்டில் ஒரு பெரிய அதிர்ச்சி அலையை உண்டாக்கியது என்று கூட சொல்லலாம். குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த பெண் வறுமையின் காரணமாக தவறான தொழிலை கையில் எடுத்து பின்னர் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை இது.
Also Read:80களில் நெகட்டிவ் ரோலில் ரஜினி பின்னிய 5 படங்கள்.. கமலை மட்டுமே தூக்கி வைத்த பாலச்சந்தர்
அவள் ஒரு தொடர் கதை : ஒரு குடும்பத்தில், குடும்பத் தலைவன் என்பவன் சரியில்லாது போய் விட்டால் அந்த குடும்பத்தை கையில் எடுக்கும் பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அந்த காலத்திலேயே வெளிப்படையாக எடுத்துச் சொன்ன படம் அவள் ஒரு தொடர்கதை. இந்த படத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் நடிகை சுஜாதாவின் நடிப்பில் பார்ப்பவர்களை கலங்க வைத்திருக்கும்.
அச்சமில்லை அச்சமில்லை: சரிதா மற்றும் ராஜேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அச்சமில்லை அச்சமில்லை. அரசியல் எப்படி சுயநலமாக மாறிவிட்டது என்பதை எடுத்துச் சொன்ன படம் இது. காதலித்து கரம் பிடித்த கணவனாக இருந்தாலும் அவன் தப்பு என்று செய்துவிட்டால் அதை எதிர்க்கும் குணம் பெண்களிடம் வேண்டுமென்பதை சரிதாவின் நடிப்பில் சிறப்பாக காட்டியிருப்பார் பாலச்சந்தர்.
சிந்து பைரவி: 1985 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சிந்து எனும் கேரக்டரில் சுகாசினியும், பைரவி என்னும் கேரக்டரில் சுலோச்சனாவும் நடித்திருப்பார்கள். இவர்கள் இருவருமே இரு வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட பெண்கள். எதையும் முற்போக்குடன் சிந்திக்கும் சிந்து, கணவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அன்போடு இருக்கும் பைரவி என பெண்களை வித்தியாசப்படுத்தி காட்டி இருப்பார் பாலச்சந்தர்.
கல்யாண அகதிகள்: காதல் மற்றும் கல்யாண வாழ்க்கையின் தோல்வியுற்ற பெண்கள், காதலில் திளைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் எல்லோரும் ஒரே இடத்தில் வசிக்கும் பொழுது அவர்களுக்கு இடையே பரிமாறப்படும் உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. இந்த படத்தில் காதலுக்காக தனக்கு பிடிக்காத எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள முற்படும் சரிதா, ஒரு கட்டத்தில் காதலே தேவையில்லை என்று தூக்கி போட்டு திரும்பி வரும் காட்சிகள் ஒவ்வொரு பெண்களுக்கும் பாடமாக அமைந்திருக்கும்.
கல்கி: கணவனின் தொல்லைகள் தாங்காமல் அவனை விட்டு வெளியே வரும் பெண், அதே ஆணை திருமணம் செய்து கொண்டு வாய் பேசக்கூட முடியாமல் தவிக்கும் மற்றொரு பெண், இவர்கள் இருவரும் பட்ட வேதனைக்கு பாடம் சொல்ல அதே ஆணை காதலித்து அவன் அவர்களுக்கு செய்த கொடுமைகளை திரும்ப செய்யும் பெண் என மூன்று பேரை கதாநாயகிகளாகக் கொண்டு பாலச்சந்தர் எடுத்த திரைப்படம் தான் கல்கி. நவீன காலத்தில் தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளும் பெண்ணாக எல்லோரும் இருக்க வேண்டும் என்பதை இந்த படத்தின் மூலம் உணர்த்தி இருப்பார்.