போடுடா வெடிய..? அட்ரா மேளத்த..? என்பது போல தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்துக்கு மேல் கொண்டாட்டம் தான்.அடுத்தடுத்து ரஜினிகாந்தின் படங்கள் சம்பந்தமாக செய்திகள் வெளியாகி உற்சாகக்களிப்பில் இருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள். அப்படி சமீபத்தில் வந்த ஒரு அப்டேட்தான் தலைவர் ரஜினிகாந்தின் 169 வது படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க அனிருத் இசையமைக்க பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக, ஒரு அறிவிப்பு வீடியோ ரஜினியின் சூப்பர் லுக்கோடு அறிவிப்பு வெளியானது.
இதையே கொண்டாடித் தீர்க்க முடியாமல் தவிக்கும் ரசிகர்களுக்கு அடுத்த அறிவிப்பாக ரஜினிகாந்தின் 170 வது படத்திற்கான ஒரு முக்கியமான தகவல் கசிந்துள்ளது. ரஜினிக்காந்தின் சமீபத்திய படங்கள் குறிப்பாக சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த படம் ரஜினி ரசிகர்களை வெளியில் தலைக்காட்ட முடியாத அளவிற்கு செய்து விட்டது. ஆனால் வசூல் ரீதியாக நல்ல வசூலை பெற்றது. இது கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும், அடுத்த படம் வேற லெவலாக இருக்க வேண்டும் தலைவரே. நம்ம யாருன்னு காட்டனும் தலைவரே என வெறித்தனமாக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ரஜினிகாந்தும் தனது ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் 170 வது படமாக வரவுள்ள படத்தை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளதாகவும், தற்போது வலிமை படத்தை தயாரித்த போனி கபூர் மற்றும் ராகுல் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும், தகவல் கசிந்து உள்ளது. அருண்ராஜா காமராஜ் இதற்கு முன்னர் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படத்தில் நெருப்புடா எனும் பாடலையும், அதன் பின் காலா படத்தில் வந்த பத்து தல ராவணா போன்ற மாஸ் பாடல்களை ரஜினிக்காக எழுதி பாடியும் இருந்தார்.
அவர் அப்போது நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டார் ரஜினியை தாம் இயக்கப்போகிறோம் என்று. அப்படி ஒரு வாய்ப்பு தான் இது. ரஜினியின் 169 வது படத்தை இயக்கும் நெல்சன் திலீப் குமாரின் உதவியாளராக பணிபுரிந்தவர் தான் அருண்ராஜா காமராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இளம் இயக்குனர்களுக்கு ரஜினி வாய்ப்பு கொடுப்பது ஒரு ஆரோக்கியமான நகர்வு என சினிமா வட்டார பெருமக்கள் பேசி வருகின்றனர். நெல்சன் திலீப் குமார் பீஸ்ட் படத்தின் இறுதிக்கட்ட பணியில் இருக்கிறார்.
அந்த பணி முடிந்த உடன் அடுத்து தலைவரின் படம் தான் என்று கூறப்படுகிறது. அருண்ராஜா காமராஜ் கனா படம் மூலம் திரைத்துறையில் ஒரு இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து நெஞ்சுக்கு நீதி எனும் படத்தை இயக்கி வருகிறார்.அதன் பின் அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் அவரின் மனைவி இறந்து போன செய்தி அனைவர்க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால தீராத மன உளைச்சலில் தவித்து வந்த அருண்ராஜா காமராஜ் இந்த படம் மூலம் புத்துணர்வோடு பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் போன்ற மிக அதிக மார்கெட் இருக்கக்கூடிய நடிகர்கள் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், போனி கபூர் போன்ற வடஇந்திய தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு அளிப்பது ஏற்புடையது அல்ல என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஏற்கனவே அஜித்குமார் நடிக்கும் வலிமை படமும் போனி கபூர் கையில் போய் சேர்ந்தது. அதேபோல் ரஜினிகாந்தின் 170 வது படமான இந்த படமும் அந்த வரிசையில் அவர் கையில் போய் சேர்ந்து இருக்கிறது. இது தமிழ் திரைத்துறை சார்ந்த தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.