தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சில பிரபலங்கள் அதன்பிறகு நகைச்சுவை நடிகராக மாறியுள்ளனர். அவர்கள் இயக்கிய படங்கள் கை கொடுக்கவில்லை என்றாலும் அவர்கள் நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் மூலம் மிகவும் பிரபலமாக உள்ளனர். அந்தவகையில் டைரக்ஷனில் இருந்து நகைச்சுவை நடிகர்களாக மாறிய பிரபலங்களை பார்க்கலாம்.
சிங்கம் புலி: அஜித் நடிப்பில் வெளியான ரெட் படத்தை சிங்கம்புலி இயக்கியிருந்தார். அதன் பிறகு சூர்யா, ஜோதிகா நடித்த மாயாவி படத்தை இயக்கியிருந்தார். சிங்கம்புலி பல படங்களில் வசனமும் எழுதியுள்ளார். பாலாவின் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.
மனோபாலா: தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் மனோபாலா. இவர் 1982-ல் கார்த்திக், சுகாசினி ஆகியோர் நடிப்பில் வெளியான ஆகாயகங்கை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு மனோபாலா 40 இற்கு மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். மனோபாலா பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 175 க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரமேஷ் கண்ணா: ரமேஷ் கண்ணா 1999 இல் அஜித், தேவயானி நடிப்பில் வெளியான தொடரும் படத்தை இயக்கியிருந்தார். இவர் விக்ரமனின் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகனாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு பிரண்ட்ஸ், படையப்பா, வில்லன் போன்ற பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
தம்பி ராமையா: மனுநீதி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியவர் தம்பி ராமையா. மலபார் போலீஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தம்பி ராமையா நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மைனா படத்தில் இவர் நடிப்புக்காக துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
ரவி மரியா: தமிழ் சினிமாவில் ஆசை ஆசையாய் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவி மரியா. இப்படத்திற்கு முன்னதாகவே குஷி படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு, வெயில், பூலோகம், ஜில்லா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ரவிமரியா பெரும்பாலான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.