சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ரஜினி படத்தில் வில்லனா நடிச்சது பற்றி ரகுவரன் என்ன சொன்னார் தெரியுமா?

ரகுவரன் நடிப்பு வித்தியாசமானது. அவர் எந்த படத்தில் எந்த கேரக்டரில் நடித்தாலும் ஹீரோவையே ஓவர் டேக் செய்துவிடும் அளவுக்கு திறமையானவர். அவர் சூப்பர் ஸ்டாருக்கு வில்லான நடித்த படத்தைப் பற்றி அவரே கூறியதை பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி – அம்பிகா – கவுண்டமணி – எஸ்.வி.சேகர் நடிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1986 ல் வெளியான படம் மிஸ்டர் பாரத். இதில், ரஜினியை விட 4 வயது குறைந்தவரான சத்யராஜ் அவருக்கு அப்பாவாக வயதான தோற்றத்தில் நடித்து மிரட்டியிருப்பார். என்னம்மா கண்ணு என்று அவர் பேசும் வசனம் பிரபலமானது.

இப்படத்தில் ரஜினியும் சத்யராஜும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். 1978 ல் வெளியான திரிசூல் என்ற இந்திப் படத்தின் ரீமேக் இது என்றாலும், தமிழுக்கு ஏற்ப கதை, திரைக்கதை, வசனம் எழுதப்பட்டது. இப்படத்தில் அனைவரின் நடிப்பும், மேக்கிங்கும் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. அதேபோல் படமும், இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.

சினிமாவில் வில்லனாக நடித்தது பற்றி ரகுவரன் ஓப்பன் டாக்

இப்படத்தில் மெயின் வில்லனாக மைக்கேல் என்ற கேரக்டரில் நடித்திருப்பார் ரகுவரன். இந்த கேரக்டர் குறித்து ஒரு பேட்டியில் ரகுவரன், ’’முதல் நாள் ஷூட்டிங்கில் சரவணன் சார், இவருக்கு ஒரு தாடி ஒட்டுனா நல்லாயிருக்கும்ல என்றார். உடனே முத்துராமன் சார் தாடிய ஒட்டிட்டு வாங்கன்னு சொன்னார். அதை ஒட்டிய பிறகு வில்லன்னா என்னன்னு புரிஞ்சு போச்சு.

அதிலிருந்து எனக்கு கோச்சிங். வில்லன்னா இப்படி இருக்கனும்னு. ரெண்டு காலை தூக்கி அப்படி ஜம்முன்னு போட்டு உட்காரு அப்பிடீனாங்க. உட்கார்ந்தேன். ஆட்டோமேடிக்கா, என் ஸ்டைல்ல ஒரு பீடி கொடுன்னு கேட்டு வாங்கி அப்புறம் என் ஸ்டைல் அங்கிருந்து ஆரம்பிச்சுது. அதோட முடியும்னு பார்த்தா கிளைமேக்ஸிலும் எங்கேயோ கொண்டு போயிருச்சு.

வில்லன்னா வில்லனா மட்டும் இல்லாம, கொஞ்சம் கேரக்டர் யோசிக்கனும், அது முத்துராமன் சார் கிட்ட வேலை செஞ்சா மூளை வேலை செய்யும். அதுதான் நான் வில்லனா நடிச்ச முதல் படம். அதிலிருந்து என்னோட கேரியர் ஸ்டார்ட் ஆகிருச்சு’’ என்று கூறினார். இப்படம் தான் தனுஷ் – பிரகாஷ் ராஜ் நடிப்பில் திருவிளையாடல் படமாக 2006 ல் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அக்காலத்தில் சத்யராஜ் ஃபேமஸ் வில்லனாக அறியப்பட்ட நிலையில் ரகுவரன் மிஸ்டர் பாரத் மூலம் வில்லனாக அறிமுகமானார். ஆனால் இருவருக்கும் போட்டியில்லை. இருவரும் தங்கள் ஸ்டைலில் முன்னேறினர். இப்படத்தின் மூலம் அவரது வில்லன் கேரியர் ஸ்டார்ட் ஆகி அது பாட்சா, ரட்சகன் உள்ளிட்ட பல படங்களிலும் தொடர்ந்தது.

Trending News