Veerayi Makkal Movie Review: குடும்ப உறவுகளின் அருமை பெருமைகளை காட்டும் படங்கள் அத்தி பூத்தாற் போல் தான் வெளி வருகிறது. ஒரு காலத்தில் மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக போன்ற படங்கள் இது போன்ற கதை அம்சத்தில் இருந்தது.
அதை அடுத்து வன்முறையின் ஆதிக்கம் அதிகமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் உறவுகளின் உன்னதத்தை சொல்லும் படியாக வெளியாகி இருக்கிறது வீராயி மக்கள். நாகராஜ் கருப்பையா இயக்கியுள்ள இப்படத்தில் எதிர்நீச்சல் புகழ் வேலராமமூர்த்தி, மாரிமுத்து ஆகியோர் அண்ணன் தம்பியாக சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
கதை கரு
இதன் விமர்சனத்தை பற்றி இங்கு காண்போம். படத்தின் தலைப்பை பார்த்த உடனேயே புரிந்து இருக்கும் கதை என்ன என்று. வேலராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா ஆகியோர் உடன் பிறந்தவர்களாக இருக்கின்றனர். ஆனால் இவர்களுக்குள் பாசம் மறைந்து பகை தான் தலை தூக்கி நிற்கிறது.
இந்த குடும்ப பகையை மாற்றி ஒற்றுமையை வளர்க்க இளம் தலைமுறை முன் வருகிறது. அதில் ஹீரோ ஜெயித்தாரா? உடன் பிறந்தவர்களுக்குள் அப்படி என்ன பிரச்சனை? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இப்படம்.
நிறை குறைகள்
வழக்கமாக நாம் பார்த்து சலித்த கதை தான். அண்ணன் தம்பிகள் சண்டை போட்டு பிரிவதும் பிறகு சேர்வதும் தான் நடக்கும் என முன்பே யோசிக்க கூடிய கதை களம் தான். ஆனாலும் அதை இயக்குனர் சரியான கதாபாத்திரங்களை வைத்து சிறப்பாக கொடுத்து இருக்கிறார்.
நாம் வேறு வேறு பரிமாணத்தில் பார்த்த இரண்டு குணசேகரன்கள் ஒரே படத்தில் இருப்பது எதிர்பார்க்கும் படியாக இருக்கிறது. அதேசமயம் மாரிமுத்துவின் இழப்பும் வருத்தமுற செய்துள்ளது. இதில் வேலராமமூர்த்தி அதே மிரட்டல் உருட்டல் என தோரணையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதேபோல் மாரிமுத்துவும் தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் அசால்டாக கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக ஹீரோ தன்னுடைய பங்கை சிறப்பாக கொடுத்துள்ளார்.
சென்டிமென்ட் காட்சிகளில் பின்னி பெடல் எடுக்கும் தீபா வழக்கமான தன்னுடைய அதிகப்படியான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்தை நிறைவு செய்திருக்கிறார். அதேபோன்று மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கின்றனர்.
இசையை பொருத்தவரையில் பாடல்களில் கிராமத்து மணம் வீசுகிறது.. இப்படி படத்தில் பல பிளஸ் இருந்தாலும் கதையோட்டம் மெதுவாக நகர்வது சிறு சலிப்பை கொடுக்கிறது. அதேபோன்று சில காட்சிகள் சீரியல் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது. அதனால் இந்த வீராயி மக்கள் ஓகே ரகமாக தான் இருக்கிறது.
சினிமா பேட்டை ரேட்டிங்: 2.25/5