வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பழையபடி சினிமாவிற்கே வந்த காமெடி நடிகர்.. கெத்தை விட்டு வெற்றிமாறனுடன் எடுக்கும் புது அவதாரம்

தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் தற்போது விஜய்சேதுபதி, சூரி இணைந்து நடிக்கும் விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். விரைவில் வெளியாக போகும் இந்தப் படத்தை அடுத்து அவர் வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார். கலைபுலி எஸ் தாணு இந்த திரைப் படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் தான் பிரபல நடிகர் கருணாஸ் வெற்றிமாறனுக்கு உதவி இயக்குனராக பணிபுரிய போகிறார்.

இதுபற்றி கருணாஸ் கூறியிருப்பதாவது, கிராமிய கானா பாடகராக என் கலை வாழ்வை துவங்கியிருந்தாலும் இவ்வளவு பெரிய அடையாளத்தையும், அறிமுகத்தையும் எனக்கு கொடுத்தது இந்த சினிமாதான். தாய்மொழியான தமிழ் சினிமாவில் முழு நேரமும் பயணிக்க வேண்டும் என்று நான் இப்போது முடிவெடுத்துள்ளேன்.

அதன்படி ஆற்றல்மிகு வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணி புரிய இருக்கிறேன். கடைசிவரை கற்றுக்கொள்வது தான் சினிமாவின் சிறப்பு. என்னை தன்னுடன் இணைத்துக்கொண்ட வெற்றிமாறனுக்கு என்னுடைய நன்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தமிழர் வீரத்தை பறைசாற்றும் இந்த திரைப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுவதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். ராமனுக்கு ஒரு அணில் இருப்பதைப் போல் இந்த வெற்றி அணியில் வெற்றிமாறனுக்கு நானும் ஓர் அணிலாக மாறப் போகிறேன்.

போலி அரசியலை புறந்தள்ளி விட்டு என்னுடைய கலைத் தாய் வீட்டுக்கு மீண்டும் திரும்பியிருக்கிறேன். என்னுடைய உதவி இயக்குனர் கனவு இந்த வாடிவாசல் திரைப்படத்தின் மூலம் நனவாகி இருக்கிறது என்று கருணாஸ் கூறியிருக்கிறார்.

Trending News