ஆந்திர மாநிலத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருப்பது விஜயநகரம் மாவட்டம். இந்த இடத்தில்தான் புகழ் பெற்ற ஸ்ரீ ராம நாராயணம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு இதுவரை பல மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.
அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. இந்த கோவில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் வில், அம்பு வடிவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவில் பார்ப்பதற்கு வில்லில் அம்பை பொருத்தி ஏவுவதற்கு தயார் நிலையில் இருப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த அம்பின் அடிப்பகுதியில் தான் கோயிலின் நுழைவு வாசல் இருக்கிறது. அதை தொடர்ந்து அம்பின் இரு பக்கமும் நிறைய தூண்கள் அமைக்கப்பட்டு பாலம் போன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அம்பின் நுனி பகுதியில் ஒரு ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்.
அதைத் தொடர்ந்து உள்ளே திருமால் சயன கோலத்தில் இருப்பதையும் நம்மால் தரிசிக்க முடியும். அத்துடன் சீதா தேவி, லட்சுமணர், ராமர் மூவருக்கும் சிலைகள் வடிக்கப்பட்டு ஆராதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் இராமாயண காவியத்தின் முழு படைப்புகளையும் நமக்கு எடுத்துச் சொல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. இது தான் இந்த கோவிலுக்கு உரிய தனிச் சிறப்பாக பார்க்கப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் கோவில் தற்போது மிகப்பெரிய சுற்றுலா தளமாக உருவெடுத்துள்ளது.