தமிழ் நாட்டில் முக்கிய பேசுபொருளாக இருப்பது நடிகர் விஜய்யின் தவெக முதல் மாநாடு பற்றித்தான். இந்த நிலையில் இம்மாநாட்டில் சினிமா பிரபலங்கள் யார் யார் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவில் நடிகராகவும், வசூல் மன்னனாகவும் வெற்றி பெற்று ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள விஜய் அரசியலில் குதித்துள்ளார். கடந்த பிப்ரவரியில் தனது அதிகாரப்பூர்வ அரசியல் வருகையை அறிவித்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அறிமுகம் செய்து, இன்னும் ஒப்புக்கொள்ளப்பட்ட படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடவிருப்பதாக அறிவித்தார்.
அதன்படி, சமீபத்தில் தவெக கட்சியின் கொடியும் கொடிப்பாடலும் வெளியிடப்பட்டது. இதை அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடினர். கட்சி அறிவித்து சில மாதங்கள் ஆகியிருந்த போதிலும், விஜய் எல்லா காரியத்தையும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் செய்து வருவதாக தகவல் வெளியானது.
கொடியை அறிமுகப்படுத்தும் விழாவில் பேசிய விஜய், எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முதல் மாநாடு நடக்கும் என்று அறிவித்தார். அதன்படி, செப்டம்பர் 23 ஆம் தேதி நடக்கவிருந்த நிலையில், சில தடைகளால் இம்மாநாடு தேதி தள்ளிப்போனது. எனவே வரும் அக்டோபர் 27 ஆம் தேதி முதல் மாநாடு நடக்ககிறது. இதற்காக போலீஸில் அனுமதி பெற்று அவர்கள் விதித்த சில நிபந்தனைகளின்படி மாநாடு நடக்கவுள்ளது.
விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடக்கும் இம்மாநாட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கேமராக்கள், தண்ணீர், கழிப்பறை வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொண்டர்கள் அமைதியுடன் மாநாட்டிற்கு வர வேண்டும் என விஜயும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.
தொண்டர்களுக்கு 3வது கடிதம் எழுதிய தளபதி
இந்த நிலையில் நாளை மறுநாள் இம்மாநாடு நடக்கவுள்ள நிலையில், விஜய் 3வதாக தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ’’அனைவரும் மாநாட்டிற்கு வரும்போது, பாதுகாப்பையும்,கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும், மனங்களிலும் ஏந்தி வாருங்கள். வரும் 2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்’’ என்று தெரிவித்துள்ளார். இது தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 குழுக்கள் தலைமையில் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள மைதானத்தில் பிரமாண்டமாக தயாராகி வரும் இம்மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. மேலும், 4 மணிக்கு தொடங்கும் மாட்டில் விஜய் மாலை 6 மணிக்கு தன் பேச்சை தொடங்கி, 8 மணி வரை பேசி தன் கட்சிக் கொள்கை, திட்டம், அரசியலுக்கு வந்த காரணம், எதிர்கால இலக்கு, மக்களுக்கு என்ன செய்ய உத்தேசம், இதெல்லாம் பற்றி விளக்கமாகப் பேசுவார் என தெரிகிறது.
தவெக மாநாட்டில் பங்கேற்கும் பிரபலங்கள் யார்?
இந்த நிலையில், தமிழத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் முக்கியமாக திராவிட கட்சிகளையும் கூட திரும்பிப் பார்க்கும் வகையில் இம்மாநாட்டை நடத்தை விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், சினிமா பிரபலங்களும், எழுத்தாளர்களும், அரசியல் தலைவர்களும் இதில் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.
அதன்படி, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்ல கண்ணு, காந்தியவாதியும் ஊழல் எதிர்ப்பாளருமான அன்னா ஹசாரே, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், வைரமுத்து, எஸ்.ஏ. சந்திரசேகர், விஜயின் நண்பர்களான, சஞ்சீவ், ஸ்ரீமன், மணிரத்னம், சுஹாஷினி, வெங்கட்பிரபு, கோபிநாத், ஏ.ஆர். முருகதாஸ், ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கலாம் என தகவல் வெளியாகிறது.
ஏற்கனவே, விஜய் மாநாட்டிற்கு செல்வீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு இன்னும் அழைப்பு வரவில்லை என்று விஷாலும், விமலும் கூறிய நிலையில் விஜய் சினிமாவில் யாருக்கெல்லாம் அழைப்பு விடுத்துள்ளார்? அரசியல் பிரபலங்கள் யாருக்கு அழைப்பு விடுத்துள்ளார்? என தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் விஜயின் தவெக முதல் மாநாட்டில் அவர் என்ன பேசுவார்? என்பதைப் பார்க்க தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆவலுடன் உள்ளனர். தவெக முதல் மாநாட்டு தேதியும் நெருங்கிவிட்டதால் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தவெக தொண்டர்களிடையே பரபரப்பு இன்னும் அதிகரித்து விட்டது, அதேசமயம் தங்கள் தலைவரை நேரில் சந்திக்கவும் ஆயத்தமாகி வருகின்றனர்.