தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும், புதுமையான முயற்சிகளையும் தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிரெயின்’. இந்தப் படத்தின் ரிலீசை முன்னிட்டு படக்குழுவினர் மேற்கொண்டுள்ள புதிய விளம்பர முயற்சி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
படத்தின் புரமோஷனுக்காக ‘Train on Wheels’ என்ற பெயரில் பிரத்யேக பிரச்சாரத்தை படக்குழு தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ரயிலைப் போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பேருந்து சென்னையில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று படத்தை விளம்பரப்படுத்த உள்ளது. வழக்கமான போஸ்டர் மற்றும் டிரெய்லர் விளம்பரங்களைத் தாண்டி, மக்களை நேரடியாகச் சென்றடையும் வகையில் இந்த முயற்சி அமைந்துள்ளது.
மிஷ்கின் டைரக்ட் செய்வதுடன் இப்படத்திற்கு இசையமைத்தும் உள்ளார். ஃபுல் ரயில் செட்டப்பில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே 40 லட்சத்திற்கும் அதிகமான வீயுவர்களைக் கடந்து எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள ‘டிரெயின்’படம், வித்தியாசமான ப்ரோமோஷன் மற்றும் சப்ஜெக்ட் மூலம் ரசிகர்களிடம் எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.




