கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜாவுக்கு,தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியிலான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்த புகார் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும்,ஆட்சியரின் வீட்டிற்குச் சென்று அத்துமீறி நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இதனை எம்எல்ஏ மறுத்துள்ளார்.
இந்த விவகாரத்திற்கு முதலில் திமுக எம்.பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்தார்தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,உதயநிதி ஸ்டாலின்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,அதிமுக வழக்கறிஞர் பிரிவு உள்ளிட்டோர் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் அரசின் தாமதமான நடவடிக்கையைக் கேள்வி எழுப்பினார்.காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இதற்கிடையே,தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டு, டிஜிபியிடம் அறிக்கை கேட்டார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.திரிசூலி தொடர்ந்த வழக்கில், ஆட்சியர் புகார் அளித்துள்ளாரா என நீதிபதி வி. லட்சுமிநாராயணன் கேள்வி எழுப்பி,விளக்க அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.மேலும்,நீதிபதி விக்டோரியா கௌரியும் காவல்துறையின் செயல்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கினார்.
இந்நிலையில்,ஆட்சியர் எஸ்.பி.யிடம் நேரடியாகப் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.




