தமிழில் சிறந்த மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக வலம் வருபவர் சின்னி ஜெயந்த். இவர், மகேந்திரன் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினி ஹீரோவாக நடித்த கை கொடுக்கும் கை என்ற படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை, குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுகிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் விஜய், அஜித், முரளி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
எத்தனை வருடங்கள் ஆனாலும், கல்லூரி மாணவராக இவர் காமெடி காட்சிகளில் நடிப்பது பற்றி பலரும் விமர்சித்தனர். எனினும் தன் தனித்துவ நடிப்பாலும் காமெடி திறமையினாலும் இன்னும் படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில், மதன் பாப்புடன் இணைந்து, நடுவராகவும் பங்கேற்றிருந்து குறிப்பிடத்தக்கது.
இவர் நடிகராகவும், மிமிக்ரி கலைஞராகவும் மட்டுமின்றி இயக்குனராகவும் அறியப்படுகிறார். இவர் இயக்கிய படங்கள் பற்றி இதில் பார்க்கலாம்.
சின்னி ஜெயந்த் இயக்கிய திரைப்படங்கள்
சின்னி ஜெயந்த், ரேவதி நடிப்பில் ‘சின்ன புள்ள’ படம் 1994 ல் வெளியானது. இப்படத்தை அவரது அஷ்டலட்சுமி கிரியேட்டர்ஸின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து, ‘உனக்காக மட்டும்’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதன்பின், கானல் நீ என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் ஜே.ஜே.ரித்தேஷ் – மனிஷா சட்டர்ஜி இருவரும் நடித்திருந்தனர். அடுத்து, ‘இதோ வருகிறேன்’ படத்தை இயக்கினார்.
2011ல் அவர் இயக்கத்தில் வெளியான கடைசிப் படம் ‘நீயே என் காதலி’. இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
ஒரு நடிகராகவே அறியப்படும் சின்னி ஜெயந்த் இத்தனை படங்கள் இயக்கிய இயக்குனர் என்ற தகவல் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் புதிய படம் ஏதேனும் அவர் இயக்குவாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.