ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ படம் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மாண்டமான கதைக்களம், நட்சத்திரக் கூட்டணி,உலகத் தரத்திலான தொழில்நுட்பம் எனப் பல சிறப்பம்சங்களுடன் இப்படம் தயாராகி வருகிறது. குறிப்பாக,படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்தப் படத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடித்து வருகிறார்.அவருடன் பிரியங்கா சோப்ரா,பிருத்விராஜ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமான முறையில் நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, இப்படத்தில் இடம்பெறும் விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) மற்றும் சிஜிஐ (CGI) காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ராஜமௌலி படங்கள் என்றாலே பிரம்மாண்டமான காட்சிகளும், ரசிகர்களை வியக்க வைக்கும் தொழில்நுட்பமும் முக்கிய அம்சமாக இருக்கும். அந்த வகையில்,‘வாரணாசி’ படத்திலும் ஒவ்வொரு காட்சியையும் மிகத் துல்லியமாக உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக திட்டமிட்ட ரிலீஸ்த் தேதியில் படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், ரிலீஸ் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.இருப்பினும்,இதுகுறித்து படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல் படத்தை உருவாக்க ராஜமௌலி முயற்சிப்பதால், இந்தத் தாமதம் ஏற்படுகிறதா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




