கோலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியடைந்த பல படங்களில் முதலில் வேறு நடிகர்களை நடிக்க வைக்கத்தான் அந்தந்தப் படங்களின் இயக்குநர்கள் அணுகியிருப்பார்கள்.
ஆனால், சம்பளம், கால்ஷீட் மற்றும் கதையின் மீதான விருப்பமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் அந்த வாய்ப்புகள் கைமாறியிருக்கும். பின்னர், அந்தப் படங்கள் வேறு நடிகர்களின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்களாகவும் அமைந்திருக்கும்.
உதாரணமாக, எந்திரன் படத்தில் முதலில் கமல்ஹாசன் நடிக்கவிருந்ததாகவும், ஜென்டில்மேன் படத்தில் முதலில் சரத்குமாரை அணுகியதாகவும் இயக்குநர் ஷங்கர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதேபோல், இயக்குநர் பாலாவின் நான் கடவுள் மற்றும் ஏ.ஆர். முருகதாஸின் கஜினி ஆகிய படங்களுக்கும் முதலில் அஜித்குமாரைத்தான் அணுகியதாகக் கூறப்படுகிறது.
சண்டக்கோழி படத்தின் கதைகூட முதலில் விஜய்க்காக எழுதப்பட்டது என்றும், விஜய்க்குக் கதை பிடிக்காததால் அந்தப் படத்தில் விஷால் நடித்தார் என்றும் இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
இதுபோலப் பல முன்னணி நடிகர்கள் தவறவிட்ட படங்கள், பின்னர் வேறு நடிகர்களின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்களாக அமைந்திருக்கின்றன.
ஒவ்வொரு கதாபாத்திரமும் தனக்கான கலைஞர்களைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்பார்கள். அந்த வகையில், தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட நடிகர்களின் படங்கள் இன்று தமிழ் சினிமா வரலாற்றில் நீங்கா இடம்பிடித்துவிட்டன.




