அஜித் இப்போது நடித்து வரும் படத்தை அவரே தயாரிக்கிறார் என்ற விஷயம் சாதாரணமான ஒரு முடிவு கிடையாது. ஒரு கட்டத்தில் தன்னுடைய சம்பளத்தை எந்த தயாரிப்பாளரும் கொடுக்க முடியாத நிலை வரும்போது, “நாமே தயாரித்துக் கொள்வோம்” என்று முடிவு செய்வது ஒரு பக்கம் புத்திசாலித்தனமாக தெரிந்தாலும், அதற்குப் பின்னால் பெரிய ரிஸ்க்கும் இருக்கிறது.
அஜித்தின் சம்பளம் மட்டும் 150 கோடி என்று வைத்துக் கொள்வோம். அதற்கு மேல் இயக்குநர், மற்ற நடிகர்கள், டெக்னீசியன்கள், படப்பிடிப்பு செலவு என குறைந்தது 50 கோடி என்று வைத்தாலும் 200 கோடி ஆகிவிடுகிறது. இந்த பணத்தை திரும்ப எடுக்க வேண்டும் என்றால் திரையரங்குகளில் படம் சுமாராக ஓடினால் மட்டும் போதாது. மிகப்பெரிய வசூல் தேவைப்படும்.
ஆனால் இங்கே ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அஜித் தன்னுடைய சம்பளத்தை எடுத்துக் கொள்ளாமல், சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படத்தை தயாரித்தால் கணக்கு மொத்தமாக மாறிவிடும். உதாரணமாக 50 கோடிக்குள் ஒரு படத்தை முடித்து, திரையரங்கு உரிமை, ஓடிடி, சாட்டிலைட் என நல்ல விலைக்கு விற்றுவிட்டால், அந்தப் படம் சாதாரணமாக ஓடினால்கூட தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
அதனால்தான் சொந்தமாக படம் தயாரிப்பது அஜித்துக்கு ஒரு நல்ல பிசினஸ் முடிவாகக்கூட இருக்கலாம். படம் பெரிய ஹிட்டானால் லாபம் மிகப்பெரியதாக இருக்கும். சுமாராக ஓடினால் சின்ன லாபம் கிடைக்கும். படம் மோசமாக போனால் தான் பிரச்சனை.
என்னதான் அஜித்துக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருந்தாலும், படம் எடுப்பது வேறு. தயாரிப்பு நிறுவனத்தை நடத்துவது வேறு. பணத்தை எங்கே செலவு செய்ய வேண்டும், எங்கே கட்டுப்படுத்த வேண்டும், படத்தை எப்போது விற்க வேண்டும், எந்த உரிமையை எவ்வளவு விலைக்கு கொடுக்க வேண்டும் என ஒவ்வொரு விஷயத்திலும் சரியான முடிவு எடுக்க வேண்டும்.
இதில்தான் ஷாலினிக்கு உண்மையான சவால் இருக்கிறது. சினிமா தயாரிப்பில் பெரிய அனுபவம் இல்லாத ஒருவர் இவ்வளவு பெரிய நிறுவனத்தின் முடிவுகளை எப்படி கையாளப் போகிறார் என்பது முக்கியமான கேள்வி.
சுரேஷ் சந்திரா கூடவே இருந்து வழிகாட்டினாலும், இறுதியில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் வெற்றி என்பது அஜித்தின் மார்க்கெட்டால் மட்டும் வராது; பணத்தை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.




