தமிழக அரசியல் களத்தில் தற்போது தவெக ஆட்சி தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.இந்நிலையில்,தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்க சில ஐஏஎஸ் அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைகோ எழுதிய’வைகோ இன் பார்லிமெண்ட்’ என்ற நூலின் மறுவெளியீட்டு விழா நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ‘கவிக்கடல் கண்ணதாசன்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் வைகோ சிறப்புரையாற்றினார்.அப்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர்,தவெக ஆட்சி அமைந்த பிறகு சில அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இதுகுறித்து பேசிய வைகோ,முன்பு வழக்கமாகக் கிடைத்து வந்த மாமூல் பணம் தற்போது கிடைக்காததால், சில ஐஏஎஸ் அதிகாரிகள் தவெக ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர்களைக்கூட தன்னால் தெரிவிக்க முடியும் என்றும்,ஆனால் தற்போது அவர்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை என்றும் கூறினார்.அதேசமயம், இத்தகைய முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும்,கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏவாக இருந்த வி.எஸ்.பாபுவின் இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் விஜய்யுடன் சுமார் 12 கிலோமீட்டர் தூரம் நடந்ததாகவும் வைகோ குறிப்பிட்டார். அப்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் தனது பேச்சில் விளக்கமளித்தார்.
வைகோவின் இந்தக் குற்றச்சாட்டு அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கான ஆதாரங்கள் வெளியிடப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.




