புதன்கிழமை, ஜனவரி 8, 2025

மோடி, நிர்மலா சீதாராமன் பதவி விலகினால் நானும் விலகத் தயார் – முதல்வர் சித்தராமையா

Siddaramaiah: ‘முடா’ முறைகேடு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்த செய்தியாளரின் கேள்விக்கு முதல்வர் சித்தராமையா, ‘பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் பதவி விலகினால் நானும் விலகத் தயார்’ என்று கூறியுள்ளார்.

கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், முதல்வரின் மனைவி பார்வதி பெயரில் ரூ. 56 கோடி மதிப்புடைய 14 இடங்களை மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் ஒதுக்கியது. இந்த ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், பெங்களூருவில் வசிக்கும் சமூக ஆர்வலர் எஸ்.பி.பிரதீப் குமார், டிஜே.ஆப்ரகாம் மற்றும் மைசூர் பகுதியைச் சேர்ந்த சினேகமாயி கிருஷ்ணா உள்ளிட்டோர் புகார் மனு அளித்திருந்தனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கர் நாடக ஆளுனர் தாவர்சந்த் கெலாட் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி, முதல்வர் சித்தராமையா மீது வழக்குத் தொடுக்க அனுமதியளித்திருந்தார். ஆளுனரின் இம்முடிவுக்கு எதிராக முதல்வர் சித்தராமையா தரப்பில் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி நாக பிரசன்னா, ‘முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என்று உத்தரவிட்டதுடன் மனுவைத் தள்ளுபடி’ செய்தார்.

இதையடுத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், விசாரணையில், ”முதல்வர் சித்தராமையா மீது மைசூரு மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்து, அதன் அறிக்கையை 3 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது. எனவே ‘முடா’ முறைகேடு தொடர்பாக முதல்வர் , அவரது மனைவி பார்வதில், மைத்துனர் மல்லிகார்ஜூனசாமி, மற்றும் தேவராஜூ உள்ளிட்டோர் மீது லோக் ஆயுக்தா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் சித்தராமையா, ”என் பதவியை நான் ராஜினாமா செய்யமாட்டேன். குமாரசாமி மீது வழக்குகள் உள்ளன. அவர் ராஜினாமா செய்வாரா? தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாருக்கு பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நில ஒதுக்கீடு புகாரில் மத்திய அமைச்சர் குமாரசாமி பதவி விலகவேண்டும். அவர்கள் விலகினால் நானும் முதல்வர் பதவியில் இருந்து விலகத் தயார்” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வரும் நிலையில், அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள்ளது. ‘கடந்த தேர்தலில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸுக்கு ஆட்சி மாறியுள்ள நிலையில், காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டு வரும் தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்தலாம் ‘என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

Trending News