தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பற்றி பாஜக முன்னாள் நிர்வாகி எதிர்மறையான கருத்துகளைக் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டு அரசியலை மற்ற மாநிலங்களில் இருந்து பிரித்துப் பார்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுவர். காரணம், தமிழர்கள் அரசியலைக் கூர்ந்து பார்க்கவில்லை என்றாலும் அதில் உள்ள நுட்பங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், தங்களுக்கான தலைமை யார் என்பதை தேர்வு செய்வதில் அவர்கள் குழப்பமடைவதில்லை.
அதனால்தான், இன்றுவரை திராவிட கட்சிகளின் பிடியில் ஆட்சியதிகாரம் உள்ளது தமிழ்நாட்டில். தமிழ் நாட்டிற்கு என ஒரு அரசியல் இல்லை என்றாலும் பாஜக உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் தங்கள் கால்களை வலுவாக ஊன்ற தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டில் சில தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்க முடியாததற்கு மக்களின் புரையோடிப்போன திராவிட சித்தாந்தங்கள் தான்.
திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கே பெரும்பான்மை எண்ணிக்கையில் மக்கள் ஓட்டுப் போட்டு ஆட்சியில் அமர வைக்க மக்கள் தயங்கி வருகிறார்கள் எனில் புதிய கட்சிகளுக்கு எப்படி என்று இனிமேல் போகப் போகத்தான் தெரியும்! அந்தவகையில் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் வென்று முதலமைச்சாராகத் திட்டமிட்டுள்ளார்.
இக்கட்சியின் கொடியும் கொடிப்பாடலும் வெளியான நிலையில் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிர வாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடுநடக்கவுள்ளது. இம்மாநாட்டிற்கான தீவிர வேலைகளில் தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஏற்கனவே புஸ்ஸி ஆனந்தை பலரும் ட்ரோல் செய்து வரும் நிலையில், திருச்சி சூர்யா, புஸ்ஸி ஆனந்த் இருக்கும் வரை விஜய் அரசியலில் ஜெயிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ‘விஜய் மீது எனக்கு ஒரு நம்பிக்கையுள்ளது. புஸ்ஸி ஆனந்தை அவர் தன்னுடன் வைத்திருக்கும் வரை அந்தக் கட்சி உருப்பட முடியாது. அவர் நிர்வாகிகளை கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறாராம். கட்சி நிர்வாகிகளைக் கூட்டி வைத்து அறையில் வைத்து அடிக்கிறாராம். அரசியல் அறிவு இருப்பவர்களை உடன் வைத்துக் கொண்டால்தால் அவர்கள் அரசியல் ரீதியாக ஆலோசனைகளை வழங்குவர். இவர் ஒன்றும் அரசியல் ஞானி கிடையாது. பாண்டிச்சேரிதான் அவரது நேட்டிவ். அங்கிருந்து கொண்டு தமிழ் நாட்டின் அரசியலை சரிசெய்ய என்பது முடியாது ‘என்று தெரிவித்துள்ளார்.
விஜய் நடத்திய கல்வி விழா, மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கும் விழாவிலும் புஸ்ஸி ஆனந்த் ரசிகர்களை மிரட்டுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விஜயின் நம்பிக்கைக்குரியவராகவும், தவெக பொதுச்செயலாளருமான புஸ்ஸி ஆனந்தைப் பற்றி திருச்சி சிவா கூறியதற்கு எதிர்ப்பு கூறி வருவதுடன், அக்கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சமூக வலைதளங்களில் புஸ்ஸி ஆனந்த்துக்கு ஆதரவாக கருத்துகள் கூறி வருகின்றனர்.