உலக சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் ஷங்கர். இவர் பல கோடி ரூபாய் பொருட்செலவில் அந்தக் காலத்திலேயே மிகவும் பிரம்மாண்டமாக நம் கற்பனைக்கு எட்டாத பல காட்சிகளை வைத்து திரைப்படங்களை இயக்கியவர். இதனாலேயே இவருடன் சேர்ந்து பணிபுரிவதற்கு பலருக்கும் ஆர்வம் உண்டு.
அப்படிப்பட்ட ஷங்கர் இணைந்து பணிபுரிய ஆசைப்பட்டது முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா உடன் தான். இவர்கள் இருவரும் இணைந்து எந்த திரைப்படத்திலும் பணிபுரிந்ததே கிடையாது. அதனால் சங்கர் இவருடன் இணைந்து பணிபுரிய ஆசை என்று பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி திரைப்படத்தின் ஒரு விழாவில் கூட ஷங்கர் இதை மேடையில் ஓப்பனாக தெரிவித்தார். ஆனால் இதற்கு இளையராஜா எந்த ஒரு சாதகமான பதிலையும் தெரிவிக்காமல் இருந்தார். அதன் பிறகுதான் இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு சிறு மனஸ்தாபம் ஏற்பட்டது.
அதாவது ஷங்கரின் உதவி இயக்குனர் கார்த்திக் என்பவர் நடிகர் வைபவை வைத்து கப்பல் என்ற படத்தை எடுத்தார். அந்தப் படத்தின் கதை பிடித்துப்போகவே ஷங்கர் அதை தன்னுடைய சொந்த பேனரில் வெளியிட முடிவு செய்தார். அதன்படியே திரைப்படமும் வெளியானது.
அந்தப் படம் வெளிவந்த பிறகு இளையராஜா, ஷங்கருக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். ஏனென்றால் அந்த திரைப்படத்தில் ஊரு விட்டு ஊரு வந்து என்ற ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும். கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் இந்தப் பாடல் வரும்.
இதன் காரணமாக இளையராஜா அவருடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தி விட்டதாக சங்கருக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் சங்கரோ இந்தப் பாட்டை நாங்கள் உரிமை பெற்று தான் படத்தில் வைத்தோம் என்று இளையராஜாவுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார்.
இதுதான் இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனை என்று கூறப்படுகிறது. இதேபோன்றுதான் இளையராஜா அவருடைய பாடலை அனுமதி பெறாமல் யாரும் மேடையில் பாடக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.