சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான கடந்த 14 ஆம் தேதி அம்பேத்கரும், மோடியும் என்ற நூல் வெளியானது. இந்த நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையையொட்டி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
சமூகநீதி தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து மிகப்பெரிய கனவு கண்டவர்கள் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். அம்பேத்கரையும், மோடியையும் ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்துக்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் பலரும் தங்கள் கண்டன குரல்களை பதிவு செய்துள்ளனர்.
இளையராஜா தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில், மோடி – அம்பேத்கர் குறித்த கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று இசைஞானி இளையராஜா திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த கருத்துக்கு சிலர் எதிர்த்தும் ஒரு சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ”அண்ணல் அம்பேத்கர், பிரதமர் நரேந்திர மோடி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்றைக்கும் அவரவர் துறையில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர்.
ஒரு சூரியன், ஒரு சந்திரன். அதேபோலத்தான் இங்கு யாரையும் ஒப்பிட்டு பேச முடியாது. அவர்களுக்கு நிகர் அவர்கள்தான். இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏற்றுக்கொண்டு மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது”. என்று குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜா விவகாரத்தில் இதுவரை ஆளும் திமுக தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் தான் எதிர்க்கட்சி அதிமுக தரப்பிலிருந்தும் எந்த ரியாக்ஷனும் இல்லை. இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி இளையராஜாவின் கருத்தை எதிர்த்தும், தேமுதிக தரப்பிலிருந்து இளையராஜா ஆதரவாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.