நடிகர் பார்த்திபன் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் திறமையானவர். இவரின் நடிப்பில் சேரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பாரதி கண்ணம்மா. இதில் மீனா, விஜயகுமார், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார்கள்.
இப்படம் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் காதலிப்பதும், பிறகு அவர்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை பற்றி எடுக்கப்பட்டிருந்தது. பொதுவாக திரைப்படங்களில் காதலுக்காக ஹீரோதான் தியாகம் செய்வது போல் நாம் பார்த்திருப்போம்.
ஆனால் வித்தியாசமாக இந்தப் படத்தில் ஹீரோயின் மீனா தன் காதலுக்காக உயிரை விடுவது போன்று கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்டிருக்கும். முதலில் இந்த காட்சிக்கு பார்த்திபன் சம்மதித்துள்ளார். ஆனால் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்படும் போது தனக்கு பிடிக்கவில்லை அதனால் மாற்றும்படி கூறியுள்ளார்.
அதற்கு சேரன் முடியாது என்று பிடிவாதமாக அந்த காட்சியை எடுத்து முடித்துள்ளார். சொல்லப் போனால் படத்தில் பார்த்திபன், மீனா இறந்து போகும் அந்த காட்சிதான் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. ஆனால் இப்படம் வெளியான சமயத்தில் சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது.
ஜாதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்காக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப் படத்தை கிட்டத்தட்ட தடை செய்யும் அளவுக்கு கூட சென்றது. அதனால் இப்படத்தில் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் நீக்கப்பட்டு வெளியானது. ராஜபாளையத்தில் இந்த படம் உடனே வெளியாகாமல் சிறிது தாமதமாக ஆனது.
படம் எந்த அளவுக்கு சர்ச்சைகளை சந்தித்ததோ அதே அளவுக்கு பாராட்டுகளையும், விமர்சனங்களையும் பெற்று வெற்றிபெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படி ஒரு சிறந்த படைப்பை எடுத்ததற்காக இயக்குனர் சேரன் தேசிய விருதையும் பெற்றார்.