பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்து வருகின்றன. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான ஒரு விவகாரம் தற்போது தமிழக அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ.பத்மஜாவுக்கு,தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கணவர் காவல்துறையிடம் புகார் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.ஆனால்,இந்தக் குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ மறுத்துள்ளார். தன்னைப் பற்றித் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், மதுரையில் உள்ள லேடி டோக் கல்லூரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பாலின உணர்திறன் மற்றும் உள் புகார் குழு சார்பில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி விக்டோரியா கவுரி,இந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டி முக்கியமான கேள்விகளை எழுப்பினார்.
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இதுபோன்ற நிலை ஏற்பட்டால்,அது பணியிடத்தில் நடைபெறும் துன்புறுத்தல் இல்லையா? என்றும்,புகார் அளிக்கப்பட்டும் காவல்துறை ஏன்? நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும்,பெண்கள் எந்தவித அச்சமுமின்றி பணியிடங்களில் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் பணியாற்றுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ள நிலையில்,குற்றச்சாட்டுகள் மீதான முறையான விசாரணையும் உரிய நடவடிக்கையும் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




