ஜெயம் ரவியின் நடிப்பில் கல்யாண் கிருஷ்ணன் இயக்கியிருக்கும் அகிலன் திரைப்படம் நேற்று வெளியானது. ப்ரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் போன்ற பலர் நடித்திருக்கும் இத்திரைப்படம் கடல் வழி வாணிபத்தையும், சாமானிய மக்களுக்கு தெரியாத துறைமுகத்தின் மறுபக்கத்தையும் தெளிவாக காட்டி இருக்கிறது.
இதுவரை காதல் நாயகனாகவும், ஆக்சன் ஹீரோவாகவும் வலம் வந்த ஜெயம் ரவி இப்படத்தின் மூலம் மற்றொரு பரிமாணத்தையும் காட்டி இருக்கிறார். முரட்டு தோற்றம், பார்வை என அனைத்திலும் அவர் முழு வித்தியாசத்தை கொடுத்திருக்கிறார். திரைக்கதையும் அதற்கு பக்க பலமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படத்தின் முழு விமர்சனத்தை பற்றி இங்கு காண்போம்.
கிரேன் ஆப்பரேட்டராக இருக்கும் ஜெயம் ரவி பல குற்ற வேலைகளையும் செய்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு தெரியாமல் அந்த துறைமுகத்தில் எதுவுமே நடக்காது. அப்படி இருக்கும் அவரின் ஒரே இலட்சியம் ஹார்பர் கேங்ஸ்டராக இருக்கும் கபூரை சந்திக்க வேண்டும் என்பதுதான். அதற்காக அவர் ஒரு முக்கியமான விஷயத்தை கையில் எடுக்கிறார்.
போலீசுக்கு எதிராக அவர் செய்யும் அந்த வேலையை செய்து முடித்தாரா, அவருடைய லட்சியம் நிறைவேறியதா, எதற்காக அவர் இத்தனை குற்றங்களையும் செய்கிறார் என்பதற்கான விடை தான் அகிலன் திரைப்படம். உலகம் முழுவதிலும் மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றுவதில் கடல் வாணிபத்திற்கு மிகப்பெரும் பங்கு இருக்கிறது.
Also read: ஜெயம் ரவிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. இந்த வருடம் மட்டும் இத்தனை படங்களா?
அதில் எந்த மாதிரியான குற்றங்கள் நடக்கிறது, அதன் பின்னணியில் இருக்கும் மாபியாக்கள் பற்றி அனைத்தையும் இயக்குனர் தெளிவாக உணர்த்தி இருக்கிறார். இதற்காகவே அவருக்கு ஒரு பாராட்டை தெரிவிக்கலாம். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் மொத்த படத்தையும் தனி ஒருவனாக ஜெயம் ரவி தாங்கி பிடித்து இருக்கிறார்.
இந்திய பெருங்கடலின் ராஜாவாக மாஸ் காட்டும் அவர் ஒவ்வொரு காட்சியிலும் தெறிக்க விடுகிறார். அவருக்கு அடுத்தபடியாக பிரியா பவானி சங்கர், தன்யா கதாபாத்திரங்களும் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். இப்படி படத்தில் பல நிறைகள் இருந்தாலும் முதல் பாதியில் இருந்த பரபரப்பு இரண்டாம் பாதியில் இல்லாதது சோர்வை கொடுக்கிறது.
மேலும் படம் முழுக்க கடல், ஹார்பர், கன்டெய்னர் போன்றவற்றை சுற்றியே இருப்பதால் பார்க்கும் ரசிகர்களுக்கு சில இடங்களில் சலிப்பு ஏற்படுகிறது. மற்றபடி திரைக்கதையின் வேகமும், சொல்ல வந்த கருத்தும் இதுவரை இல்லாத புது விஷயம் தான். அந்த வகையில் இந்த அகிலன் கடல் வழி மாபியாக்களின் நிஜ முகத்தை தோலுரித்து காட்டியிருக்கிறார். இதற்காகவே படத்தை ஒரு முறை பார்க்கலாம். ஆக மொத்தம் பூலோகம் படத்தின் மூலம் முத்திரை பதித்த இந்த கூட்டணி மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்திருக்கிறார்கள்.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3/5