புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சத்யராஜை வளர்க்க கமல் போட்ட திட்டம்.. நட்புக்காக சொந்த செலவில் செய்த உதவி

நடிகர் சத்யராஜ் நடித்த கேரக்டர்கள் பல யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும். ஏனென்றால் இந்த கதாபாத்திரம் என்றால் அவர் தான் என்று நம்மை சிந்திக்க வைக்கும் அளவுக்கு கனகச்சிதமாக நடித்திருப்பார். இப்போது எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடல் எடுக்கும் சத்யராஜ் ஆரம்ப காலங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார்.

மேலும் இயக்குனர்களும் இவருக்கு வில்லன் கதாபாத்திரம் தான் கொடுத்து வந்தனர். இந்நிலையில் சத்யராஜை ஹீரோவாக்கிப் பார்க்கலாம் என்று பெரிதும் ஆசைப்பட்டவர் கமல்ஹாசன். அப்போது சத்யராஜ் மற்றும் கமல் இருவருக்கும் நல்ல நட்பு இருந்து வருகிறது.

அதாவது சத்யராஜ் பெரும்பாலும் கமல் படங்களில் தான் வில்லனாக நடித்து வந்தார். அதில் காக்கிச்சட்டை, விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக மிரட்டி இருப்பார். இவர் காக்கிச்சட்டை படத்தில் பேசிய தகடு தகடு வசனம் இன்று வரை மக்கள் மனதில் இருக்கின்றது.

இந்நிலையில் சத்யராஜை ஹீரோவாக்க ஆசைப்பட்ட கமல் அவரை ராஜ்கமல் ஃபிலிம் நிறுவனம் தயாரித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்தார். சந்தான பாரதி இயக்கத்தில் உருவான இப்படம் 1987 இல் வெளியானது. இதில் கீதா, கேப்டன் ராஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மேலும் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இப்படம் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி இருந்தது. மேலும் கமல் தனது சொந்த தயாரிப்பில் தயாரித்ததால் இதில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நடித்தால் கமல் படமாக மாறிவிடும் என்பதால் அவர் மறுத்துவிட்டாராம்.

இந்த படத்தின் மூலம் சத்யராஜுக்கு தான் முழு பாராட்டும் கிடைக்க வேண்டும் என்பதாலும் ஹீரோவாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக கமல் இவ்வாறு செய்திருந்தார். இப்படத்திற்கு பிறகு தான் சத்யராஜுக்கு ஹீரோ வாய்ப்பு அடுத்தடுத்து வர தொடங்கியது. அவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்றார்.

Trending News