பொது வெளியில் பலரும் மேடைகளில் பேசும்போது கூறும் சில வார்த்தைகள் அவர்களுக்கு எதிராகவே திரும்பிவிடும். இது பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்களை சர்ச்சைகளுக்கு உள்ளாக்கி விடுகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் சரண் ஷக்தி. கடல் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக மணிரத்தினத்தால் அறிமுகம் செய்யப்பட்டார். பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தற்போது பான் இந்திய திரைப்படமான கே.ஜி.எஃப் 2 படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அண்மையில் இந்த படத்தின் பிரஸ்மீட்டின் போது இவர் பேசியது தற்போது இவருக்கு எதிராக திரும்பியுள்ளது. ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்ற அந்த பிரஸ்மீட்டில் பேசும்போது, நான் தமிழில் சிறுசிறு படங்களில் நடித்து வரும்போது, உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு படமான கே.ஜி.எஃப்யில் நடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.
அவரின் இந்த கருத்து தற்போது அவருக்கே எதிர்மறையாகி விட்டது. ஏனெனில், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய்யின் ஜில்லா படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். பின்னர் நடிகர் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் உருவான வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான எதிர்க்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுடனும் இணைந்து பணிபுரிந்துள்ளார்.
இவ்வாறாக நடித்து வரும் இவர் இந்த படங்களை சிறிய படங்கள் என குறிப்பிட்டுள்ளது தற்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கோபத்தை உண்டாக்கி உள்ளது. ஏதோ ஒரு பான் இந்திய படத்தில் நடித்து விட்டாலும், மீண்டும் இங்கு வந்து தமிழ் சினிமாவில் தானே தொடர்ந்து நடிக்க வேண்டும் அப்படி இருக்க எவ்வாறு தமிழ் படங்களை இவ்வாறு சிறிய படம் என குறிப்பிடலாம் என நெட்டிசன்கள் ஷக்தியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு நடிகர் ஷக்தி என்ன பதில் கூறி தமிழ் ரசிகர்களை சமாதானம் செய்ய போகிறார் என தெரியவில்லை. சமீபத்தில், 40 கதை கேட்டு தூங்கிய நாயகன் என நடிகர் அஸ்வினை குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு அவர் பிரஸ்மீட்டில் பேசிய பேச்சு அவருக்கு பட்ட பெயர் கொடுக்கும் அளவிற்கு பெரிய பேசும் பொருளாக இணையத்தில் மாறியது.