தமிழ் சினிமாவில் குடும்ப ஆடியன்சை கவர்ந்தவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இவர் இயக்கும் பெரும்பாலான படங்களில் ஒரு சில காட்சிகளில் இவர் நடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார். இவருடைய படங்கள் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெறும்.
இந்நிலையில் கமலின் தெனாலி படத்திற்குப் பிறகு 21 வருடங்கள் கழித்து கேஎஸ் ரவிக்குமார் ஒரு படத்தை தயாரித்துள்ளார். மலையாளப் படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கேஎஸ் ரவிக்குமார் பெற்றுள்ளார். இப்படம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.
தமிழ் ரீமேக்கில் இப்படத்திற்கு கூகுள் குட்டப்பன் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தர்ஷன், லாஸ்லியா, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் முதியவர் வேடத்தில் கேஎஸ் ரவிக்குமார் நடித்துள்ளார். கேஎஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனராக பணியாற்றிய சரவணன் மற்றும் சபரி இருவரும் இப்படத்தை இயக்கியுள்ளார்கள்.
கூகுள் குட்டப்பன் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. கே எஸ் ரவிக்குமார் இயக்குனர் விக்ரமின் மகன் கனிஷ்காவை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க இருப்பதாக கூறியுள்ளார். விக்ரமன் மற்றும் கே எஸ் ரவிக்குமார் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களின் ஒருவராக திகழ்பவர் இயக்குனர் விக்ரமன். தமிழ் சினிமாவில் புது வசந்தம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவருடைய இயக்கத்தில் வெளியான வானத்தைப் போல, பூவே உனக்காக, உன்னை நினைத்து போன்ற பல படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருந்தது.
தற்போது விக்ரமனின் மகன் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். கனிஷ்கா தனக்கு ஏற்ற கதையை பல இயக்குனர்களிடம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேஎஸ் ரவிக்குமாரின் தயாரிப்பு நிறுவனம் மூலம் தன்னுடைய முதல் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.