விவேக் நடிப்பில் மறக்க முடியாத 6 கேரக்டர்கள்.. அரசாங்க ஊழியர் டூ சின்னக்கலைவாணர், கடந்து வந்த பாதை

Vivek
Vivek

Vivek best 6 movie characters: ‘ வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் நிற்பது யார்’ என பாடியிருப்பார் மக்கள் திலகம் எம்ஜிஆர். அவரைப் போன்றே மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பவர் தான் சின்ன கலைவாணர் விவேக்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம் காம் படித்த விவேகானந்தன், பாலச்சந்தரின் படத்தின் மூலம் விவேக் ஆக மாறினார். இந்த விவேக் என்ற பெயர் ஒரு வரலாறாக மாறிவிடும் என்று அப்போது அவருக்கு தெரிந்திருக்காது.

எம் காம் படித்த கையோடு அரசு வேலைக்கு தேர்வு எழுதி, அதில் வெற்றியும் பெற்றார். தலைமைச் செயலகத்தில் வேலை கிடைத்தும், பாலச்சந்தர் இயக்கத்தில் மனதில் உறுதி வேண்டும் பட வாய்ப்பு கிடைத்ததும் தன்னுடைய கனவை நினைவாக்க ஓடோடி வந்து நடித்தார்.

அரசாங்க வேலை செய்து கொண்டே நடித்துக் கொண்டிருந்த விவேக், ஒரு கட்டத்தில் சினிமாக்காக தன்னுடைய அரசு வேலையையும் ராஜினாமா செய்தார். சின்ன படம், பெரிய படம் என்று எதுவுமே பார்க்காமல் கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்திக் கொண்டார்.

1987 ஆம் ஆண்டு சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்திருந்தாலும், 2000 ஆண்டு தொடக்கத்தில் தான் விவேக் என்னும் சிந்தனைவாசியின் அலை கருத்துகளாய் தமிழ் சினிமா ரசிகர்களை தழுவத் தொடங்கியது.

ஒரு பக்கம் வடிவேலு ஹீரோக்களிடம் அடி வாங்குவதும், கூட இருப்பவர்களை அடித்து நொறுக்குவதுமாய் குழந்தைகளுக்கு பிடித்த காமெடியை பண்ணி ஜெயித்துக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் சமூக சீர்திருத்த கருத்துக்களை தன்னுடைய காமெடிக்குள் வைத்து படம் பார்ப்பவர்களை யோசிக்க வைத்தார் சின்ன கலைவாணர் விவேக்.

இவர் நடித்த படங்களில் கீழ் வரும் ஆறு முக்கியமான கேரக்டர்களை எப்போதுமே மறந்துவிட முடியாது.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் ஆக்சன் ஹீரோவாக வெற்றி பெற்ற படம் தான் சாமி இந்த படத்தில் குடுமி வெங்கட்ராமன் என்னும் கேரக்டரில் விவேக் நடித்திருப்பார் பிரிவினை மதவாதம் தீண்டாமை என அத்தனை சமூக சீர்கேடுகளையும் தன்னுடைய காமெடி காட்சிகளின் மூலம் வெளுத்து வாங்கி இருப்பார்.

விக்ரம் காதல் ஹீரோவாக கலக்கிய காதல் சடுகுடு படத்தில் சூப்பர் சுப்பு என்னும் கேரக்டர். குழந்தை கட்டுப்பாடு, பெண் குழந்தையை ஒதுக்குவது, மூடநம்பிக்கை என மக்கள் மனதில் இருக்கும் அத்தனை கெட்ட எண்ணத்தையும் சாட்டை எடுத்து அடித்திருப்பார்.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தில் பழனி என்னும் கேரக்டர். அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் அதனால் ஏற்படும் விபத்துக்களை பற்றி ஒவ்வொரு காமெடி காட்சியிலும் பேசி இருப்பார். டேக் டைவர்ஷன் என்று சொல்லி என்ன திருப்பதி வர கூட்டிட்டு வந்துட்டீங்களே என பேசும் வசனம் சிலாகிக்க வைத்திருக்கும்.

நடிகர் விவேக் பற்றி நினைக்கும் போதெல்லாம் எமோஷனல் ஏகாம்பரம் கண்டிப்பாக நம் கண் முன் வந்து போவார். ஒரு படம் முழுக்க வசனமே பேசாமல் தன்னுடைய முக பாவனைகளை வைத்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.

நடிகர்கள் விவேக் மற்றும் தனுஷ் இருவருக்கும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் காமெடி கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க்அவுட் ஆனது அதில் ஹிட்டான படங்கள் தான் படிக்காதவன், மாப்பிள்ளை, வி ஐ பி. இதில் விஐபி படத்தில் அழகு சுந்தரம் என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். இதில் முகம் தெரியாத அவருடைய மனைவி தங்க புஷ்பத்திடமிருந்து வரும் போன் கால், அதை வைத்து செல் முருகன் மற்றும் தனுஷ் செய்யும் சேட்டை வேற லெவலில் இருக்கும்.

மாதவன் மற்றும் லிங்குசாமி கூட்டணியில் வெளியான அதிரடி ஆக்சன் படம் தான் ரன். சண்டை காட்சிகள் நிறைந்த படத்தில் இப்படியும் காமெடி காட்சிகள் வைக்க முடியும் என்பதை நிரூபித்தவர் தான் விவேக். நண்பனை தேடி சென்னைக்கு வரும் மோகன் கேரக்டரில் இந்த படத்தில் நடித்திருப்பார்.

சென்னைக்கு வந்து அவர் படும் பாடு மற்றும் ஒவ்வொரு பிரச்சனையின் போதும் தன்னுடைய அப்பாவை நினைத்துப் பார்ப்பது என தன்னுடைய மொத்த நகைச்சுவையையும் இதில் கொட்டி இருப்பார்.

Advertisement Amazon Prime Banner