புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தன்னைத் தானே செதுக்கிய அஜித்.. கோடான கோடி ரசிகர்களின் இதயங்களை வென்ற ரகசியம்

சினிமா பேட்டை வாசகர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள். உலகம் முழுவதும் இன்று உழைப்பாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மே தினம் இன்னும் ஒரு கூடுதல் சிறப்பு. காரணம் அவர்களது விருப்ப நடிகரான அஜித் குமார் அவர்கள் பிறந்த தினம். திரைத்துறையில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் உள்ளே வந்து இன்று தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகராக வலம் வருகிறார் தல அஜித் குமார். அவரைப் பற்றிய சிறு கட்டுரை இது.

பாலக்காடு மலையாளி தந்தைக்கும் கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்ட சிந்தி தாய்க்கும் பிறந்த அஜித்குமார் எளிதில் சினிமா துறையில் நுழைந்து விட இயலவில்லை. ஆரம்ப காலங்கள் முதல் திறமையான ஒரு மெக்கானிக் ஆகவே விருப்பம் கொண்டிருந்தார் அஜித். ஆனால் வாழ்க்கை அவருக்கு இன்னொரு பரிமாணத்தை கொடுக்க காத்திருந்தது. பார்ப்பதற்கு மிகவும் ஸ்மார்ட்டாக இருந்த காரணத்தால் மாடலிங் செய்யவும் சினிமா துறையில் ஒரு சில சீன்களில் தலைகாட்டும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் வருமானம் கிடைத்தால் அதை வைத்து தனக்கு விருப்பமான மெக்கானிக் தொழிலை கற்றுக் கொள்ளலாம் என்று எண்ணி அஜித்குமார் அவர்கள் இதனை செய்ய ஆரம்பித்தார்.

ஆரம்பகாலங்களில் கேமரா கலைஞர் பி சி ஸ்ரீராம் அவர்களின் உதவியால் கவனம் பெற்று ஒரு சில விளம்பரங்களில் நடித்தார் அஜித். அவரும் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களும் சிபாரிசு செய்ததின் பெயரில் அவருக்கு தெலுங்கு படமொன்றில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனபோதும் அந்த படத்தின் இயக்குனர் அகால மரணம் அடைந்த காரணத்தால் பாதியிலேயே அந்த திரைப்படம் கைவிடப்பட்டது. அஜித் தனது அடுத்த முயற்சியை தொடர்ந்து கொண்டே இருந்தார். அதன் காரணமாக தமிழில் 1993ஆம் ஆண்டு அமராவதி என்னும் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைவதற்கு முன்பு அஜித் அவர்கள் மோட்டார் ரேஸ் ஒன்றில் அடிபட்டு ஒன்றரை வருடமாக பெட் ரெஸ்டில் இருந்தார். உடம்பில் 3 ஆபரேஷன்கள் செய்யப்பட்டிருந்தது. அதன் காரணமாக அப்போதைய இளம் நடிகர் விக்ரம் அவர்கள் அந்த படத்திற்கு அஜித்திற்காக குரல் கொடுத்தார்.

அதன் பின்னர் 1994ஆம் ஆண்டில் மூன்று படங்களில் நடித்தார். அதில் ஒன்று தளபதி விஜய் அவர்களின் ராஜாவின் பார்வையிலே திரைப்படமும் ஒன்று. மற்றொரு திரைப்படம் ஓரளவுக்கு கவனம் பெற்ற பவித்ரா. இதில் தாய் ஸ்தானத்தில் வரும் ராதிகாவுடன் அன்பு பாராட்டும் கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருந்தார். ஆயினும் பெரியதொரு வெற்றி பெறாத அஜித்குமார் நல்ல கலெக்ஷன் தரும் திரைப்படம் ஒன்றுக்காக காத்திருந்தார். அவருடைய அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த திரைப்படம் 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆசை. இந்தப் படத்தை இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களின் உதவியாளரான வசந்த் இயக்கியிருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை கவனம் பெற்ற அஜித் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். அதில் முக்கியமான ஒரு திரைப்படம் இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கோட்டை. சிறந்த திரைப்படத்திற்கான நேஷனல் விருது பெற்ற இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பார்க்காமல் வரும் காதல் அப்போது டிரண்டிங்கில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் கோட்டை படத்திற்கு பிறகு தொடர்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வந்தார் அஜீத். அவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக பெரும் வரவேற்பைப் பெறவில்லை. பிரசாந்துடன் அவர் இணைந்து நடித்த கல்லூரி வாசல் திரைப்படம் பெரிதாகப் போகவில்லை. அப்போதுதான் அவர் தனது ஆஸ்தான இயக்குனரான சரன் அவர்களை சந்திக்கிறார். இயக்குனர் சரன் அவர்களும் இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்களின் பட்டறையில் இருந்து வந்தவர். இருவருக்கும் வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் வெளிவந்த திரைப்படம் தான் காதல் மன்னன். அஜித் அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. பரத்வாஜ் அவர்களின் இசையில் பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. தொடர்ந்து எஸ் ஜே சூர்யா அவர்களின் இயக்கத்தில் அவர் நடித்த வாலி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது. இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் அஜீத் நடித்து இருந்தார் அதில் வாய் பேச முடியாத காது கேளாத ஊமை அண்ணனாக அவர் நடித்து மிரட்டி இருந்தார் என்பது கூடுதல் கவனம் பெற்றது.

ஒரு பக்கம் வேகமாக அஜித் வளர்ந்து வந்த போதும் திரைத்துறையில் அவர் நட்புக்கு மதிப்பளிக்க தவறவில்லை. உடன் நடித்த பல நடிகர்களிடம் நட்பாகவும் அவர்களின் விருப்பத்திற்காக கௌரவ தோற்றம் செய்துவந்தார். ஏற்கனவே தளபதி விஜய் மற்றும் காதல் இளவரசன் பிரசாந்த் அவர்களோடு நடித்திருந்த அஜித் நட்புக்காக ஆனந்த பூங்காற்றே, நீ வருவாய் என போன்ற திரைப் படங்களிலும் நடித்து கொடுத்தார். மீண்டும் இயக்குனர் சரணுடன் சேர்ந்து அமர்க்களம் என்னும் மாபெரும் கமர்சியல் வெற்றி படத்தை கொடுத்த அஜித் இந்த படத்தில் தான் மனைவியான ஷாலினியுடன் முதல் முறையாக நடித்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட புரிதல், காதல் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அஜித் தனது சொந்த விருப்பமான மோட்டார் ரேஸில் பங்கேற்பதை ஒருபோதும் குறைத்துக் கொள்ளவில்லை. ஒருபக்கம் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் தன்னுடைய விருப்பமான ரேஸிங் பயிற்சியை மேற்கொண்டு கொண்டே இருந்தார். அந்த வகையில் அவர் வெகு சீக்கிரமே முன்னேறி இந்தியாவில் நடந்த பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றார். அதனால் ஊக்கம் அடைந்த அஜித் அவர்கள் மலேசியாவில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் ஆசியா ரேஸில் பங்குபெற்று அசத்தினார்.

அஜித் அவர்களுக்கு எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. திரைப்படங்களில் வரும் வருமானம் மட்டுமே அவருக்கு சந்தோஷத்தைக் கொடுப்பதாக இருக்கவில்லை. சினிமா நேரம் போக மற்ற நேரங்களில் அவருக்கு விருப்பமான பல தொழில்களில் ஆர்வமுடன் பங்கேற்றார், உழைத்தார், கற்றுக்கொண்டார். அஜித் அவர்களுக்கு புகைப்படம் எடுப்பதிலும் அலாதி பிரியம் உண்டு. மிகவும் விலை உயர்ந்த கேமராக்களை தன்வசம் வைத்திருக்கும் அடித்தவர்கள் அவ்வப்போது தனது விருப்பமான வகையில் புகைப்படங்களை எடுத்து மகிழ்வார். அஜித்திற்கு சமைப்பதும் மிகவும் ஈடுபாடு உண்டு. அவர் நடிக்கும் திரைப்படங்களில் மற்ற உடன் நடிக்கும் நடிகர்களுக்கு எல்லாம் தன் கையாலேயே பிரியாணி செய்து பரிமாறுவார் என்பது சினிமா வட்டாரம் நன்கு அறிந்த செய்தி. சமீபத்தில் கூட ட்ரோன்களை உருவாக்கும் அமைப்புடன் சேர்ந்து புதிய ட்ரோன்களை உருவாக்குகிறார்.

அஜித் குமார் அவர்களின் இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணம் அவருடைய நல்ல நேரம் மட்டும் என்று சொல்லி அது ஒரு புறம் தள்ளி வைத்து விட இயலாது. இந்த மாபெரும் வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணமாக அமைந்தது அவருடைய எளிமையான பழகும் பழக்கவழக்கம். தன்னுடன் பணியாற்றும் எளிய நடிகர்களையும் தன்னிடம் வேலை செய்யும் எளிய மக்களையும் மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்துவார் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் தொலை தூரப் பயணங்களை மேற் கொள்ளவும் தவறுவதில்லை அஜித். அப்படி செல்லும்போது மிக சாதாரணமான ஹோட்டல்களிலும் டீக்கடைகளிலும் உணவு அருந்துவதும் நாம் அடிக்கடி காண்கிறோம்.

இவ்வளவு சிறப்புகளை கொண்டிருக்கும் அஜித் அவர்கள் தொடர்ந்து நல்ல திரைப்படங்களில் நடித்து பல வெற்றி வாகை சூட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். திரைத்துறையில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் நுழைவது மிகவும் கடினம். அதேபோல வெற்றிகளைத் தொடர்ந்து தக்க வைப்பதும் மிக மிகக் கடினம். அந்தவகையில் இரண்டையும் தனது உழைப்பால் சாதித்தவர் தல அஜித்குமார் என்று கூறினால் அது மிகையல்ல.

உழைப்பால் தன்னைச் செதுக்கிக் கொண்ட அஜித் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் சார்பிலும் அவருடைய கோடானு கோடி ரசிகர்கள் சார்பிலும்!

Trending News