விக்ரம் இன்று எல்லோருக்கும் பிடித்தமான நடிகர். சிறந்த நடிகரும் கூட. ஆனால் ஆரம்ப காலக்கட்டத்தில் அவருக்கு வெற்றிப்படங்கள் அமையவில்லை. அவர் பாலாவின் சேது படத்திற்குப் பின் தான் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். சேதுவுக்குப் முன் அவர் நடித்த படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
கலாட்டா குடும்பம் & என் காதல் கண்மணி
விக்ரம் ஆரம்பத்தில், சினிமாவில் நுழையும் முன்பு 1988 ல் கைலாசம் பாலசந்தர் இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார். அதன்பின், 1990 ல் டி.ஜே. ஹாய் இயக்கத்தில், என் காதல் கண்மணி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார் விக்ரம். இதில், நம்பியார், எஸ்.எஸ்.சந்திரன், வி.கே.ராமசாமி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தந்துவிட்டேன் என்னை
சி.வி.ஸ்ரீதர் இயக்கத்தில், விக்ரம், ரோகிணி நடிப்பில் உருவான படம் தந்துவிட்டேன் என்னை. இளையராஜா இசையமைத்திருந்தார். காதல் கதையில் அமைந்த இப்படம் 1991 ல் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
காவல் கீதம்
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் காவல் கீதம். இதில், சித்தாரா, சார்லி, சின்னி ஜெயந்த், சீனிவாசன், சசிகுமார் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்தார். வேதம் புதிது கண்ணன் கதை எழுதினார். ஆனால் பெரிய வெற்றியைப் பெறவில்லை என கூறப்படுகிறது.
மீரா
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா நடித்த படம் மீரா. இதில், நாசரும், சரத்குமாரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். லெனின் எடிட் செய்ய, இளையராஜா இசையமைத்திருந்தார். 1992 ல் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றது.
புதிய மன்னர்கள்
விக்ரம், மோகினி நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1994 ல் வெளியான படம் புதிய மன்னர்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். எடுடா அந்த சூரிய , நீ கட்டும் சேல ஆகிய பாடல்கள் செம ஹிட்டானது. ஆனால் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இப்படி, ஆரம்பத்திலேயே எந்த ஒரு நடிக்கருக்கும் கிடைக்காத வகையில், ஸ்ரீதர், எஸ்.பி.முத்துராமன், விக்ரமன் போன்ற ஜாம்பாவான்கள் இயக்கத்தில் நடித்தும் கூட விக்ரமுக்கு சேது படம் முன்பு வரை எந்த படமும் வெற்றிபெறவில்லை என சினிமா விமர்சகர்களால் கூறப்படுகிறது.