வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

90ஸ் ஹீரோக்களுக்கு ஸ்கெட்ச் போடும் லோகேஷ்.. காமெடியனாக மாறியதால் வந்த சங்கடம்

தளபதி-67 திரைப்படத்தில் 90ஸ் கால முக்கிய வில்லன் ஒருவர் இணைந்திருக்கிறார். நடிகர் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படம், கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டது. இதற்காக ஆறு வில்லன்கள் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள். சஞ்சய்தத் மற்றும் பிரித்விராஜ் ஏற்கனவே தேர்வாகி விட்டார்கள், லோகேஷ் கனகராஜ் அடுத்த வில்லன்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

பழைய வில்லன்களை மீண்டும் திரைக்கு கொண்டு வருவது இப்போது புதியதாக தமிழ் சினிமாவில் டிரெண்டாகி வருகிறது. அந்த வரிசையில் என்ட்ரி கொடுத்த ஆனந்தராஜ் இப்போது படு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். 90களில் மிகக் கொடூர வில்லனாக திரையில் பயமுறுத்தி, சரத்குமார் சத்யராஜ் போன்ற நடிகர்கள் புரட்டியெடுத்த இவர் இப்போது காமெடியில் கலக்கி வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் படங்களை எடுத்துக்கொண்டால் அவர் தேர்ந்தெடுக்கும் வில்லன் கேரக்டர்கள் வில்லனாகவே தெரிய மாட்டார்கள் எதிர் நாயகனாக தான் தெரிவார்கள். வில்லன்களை மிகவும் பலசாலியாகவும், புத்திசாலியாகவும் காட்டுவதில் லோகேஷ் கனகராஜ் வல்லவர். இதுவரை அர்ஜுன் தாஸ் போன்ற இளம் நடிகர்களை வில்லனாக திரைக்கு கொண்டு வந்த லோகேஷ், விஜய் உடனான மாஸ்டர் திரைப்படத்தில் முதன்முதலாக நடிகர் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைத்தார்.

அதே கூட்டணியை தொடர்ந்து விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியை இவர் வில்லனாக நடிக்க வைத்திருந்தாலும் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சூர்யாவை இந்த படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார். சூர்யாவுக்கு கடைசி 15 நிமிட காட்சிகளே என்றாலும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் அவர் படுபயங்கரமாக மிரட்டி இருந்தார்.

இதுவரை ஆக்ஷன் திரைப்படங்கள், காதல் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த சூர்யாவுக்கு இந்த வில்லன் கேரக்டர் மிக அழகாகவே பொருந்தியது. இனி வரும் படங்களிலும் சூர்யா வில்லனாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் ராம் சரண் நடிக்கும் ஆர்சி 15 என்ற படத்தில் சூர்யா வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூட தகவல்கள் வெளியாகின்றன.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல இன்டர்வியூகளில் தனக்கு மன்சூரலிகான் மிகவும் பிடிக்கும் என தெரிவித்திருக்கிறார், இப்படி இருக்க தளபதி 67 திரைப்படத்தில் தற்போது மன்சூரலிகான் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழைய வில்லன்களை புது படங்களில் கொண்டுவரும்போது பொதுவாகவே அவர்களை ஒரு காமெடி கதாபாத்திரத்தை கொடுக்கின்றனர். லோகேஷ் கனகராஜின் இந்த படம் மன்சூர் அலிகானை மறுபடியும் அதே கேப்டன் பிரபாகரன் வில்லனாக காட்டுமா, இல்லை வழக்கம்போல காமெடியாக காட்டி விடுமா என்பது பட ரிலீஸின்போது தெரியும்.

Trending News