ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இந்தியா சினிமாவுக்கே அப்பனுக்கு அப்பனாக மாறிய மணிரத்தினம்.. 29 வருடங்களுக்கு முன்பே நடந்த ஆச்சர்யம்!

இந்திய சினிமாவில் ஒரு புதிய யுக்தியாக பான் இந்தியா படங்கள் அதிகமாக வெளியாகி வருகிறது. இயக்குனர்களும்,ஹீரோக்களும் அதையே தான் விரும்புகின்றனர். இந்திய அளவில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் படம் வெளியாகும் போது எளிதாக இந்திய அளவில் படத்தின் வியாபாரத்தை மாற்றி விடலாம் என்று இந்த யுக்தியை பலரும் பின்தொடர்கின்றனர்.

எடுத்துக்காட்டுக்கு பாகுபலியின் இரண்டு பாகங்கள், ரஜினியின் 2.0 , தென் திரை உலகத்தை கலக்கிய யாஷின் KGF, பிரபாசின் சாஹோ, தற்போது வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் என பலப்படங்களை சொல்லலாம். ஆனால் இது ஒரு புது யுக்தி என்று நாம் நினைக்கும் நேரத்தில், அங்கே ஏற்கனவே ஒருத்தன் தன்னோட கால் தடத்தை பதிச்சுட்டான் என்று சொல்வது போல, இயக்குனர் மணிரத்தினம் 90களின் தொடக்கத்திலேயே இதை செய்து விட்டார் என்பதுதான் உச்சகட்ட ஆச்சர்யம்.

1992 ஆம் ஆண்டில் வெளியான ரோஜா படம் தமிழ் சினிமாவின் புதிய அத்தியாத்தின் தொடக்கம் என்று கருதப்படுகிறது. அந்த அளவிற்கு புத்தம் புதிய உலகிற்குள் நம்மை ஆழ்த்திய படம் அது. அந்த படம் ஒரே நேரத்தில் தமிழில் மட்டுமின்றி இந்தி,தெலுங்கு, மலையாளம், மராத்தி என 5 மொழிகளில் டப் செய்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி 1992 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இதே போல 1995 ஆம் ஆண்டு வெளியான பாம்பே திரைப்படமும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியானது. இதன் பாடல்கள் அனைத்தும் அந்த காலகட்ட இளைஞர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதன் பிறகு 1998 ஆம் ஆண்டு இந்தியில் தில் சே என்றும் தமிழில் உயிரே என்ற பெயரிலும் மணிரத்தினத்தின் காதல் காவியம் வெளியானது. தமிழ், தெலுங்கு , மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இந்த படம் டப் செய்யப்பட்டு வெளியானது. தமிழில் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு நடிகர் அரவிந்த் சாமி டப்பிங் செய்து இருந்தார்.

2010 ஆம் ஆண்டு பல முன்னணி நடிகர்களை வைத்து உருவான பிரமாண்டமான ஒரு படம் தான் ராவணன். பான் இந்தியா படம் என்று சொன்னால் அதற்க்கு அத்தனை பொருத்தமும் இருக்கும் படம்தான் இந்த ராவணன் படம். இந்த படத்தின் கதை மற்றும் அதில் நடித்த நடிகர்களே அதற்கு சாட்சி. இந்த படம் 2010 ஆம் ஆண்டு இந்தி, தமிழ். தெலுங்கு என மூன்று மொழிகளில் கதாபாத்திர நடிகர் தேர்வு மட்டும் வெளியாகும் மொழிக்கு ஏற்றார் போல சற்று மாற்றி அமைக்கப்பட்டு வெளியானது.

இப்படி அப்போதே பான் இந்தியா படம் என்ற யுக்தியை திரை உலகிற்கு திறந்து வைத்தவர் மணிரத்தினம். இதுவரை இவர் எடுக்கும் அனைத்து படங்களும் இந்திய அளவில் அதிகமாக எதிர்பார்க்கப்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது இவரின் இந்த கடந்த கால முயற்சிகள் தான். உண்மையில் இவரை பான் இந்தியா படங்களின் தந்தை என்று அழைத்தால் கூட மிகையாகாது. இந்திய சினிமாவில் பல ஜாம்பவான்கள் செய்யும் அனைத்து முயற்சிக்கும் முன்னால் அப்பனுக்கு அப்பன் மணிரத்னம் இருந்திருக்கிறார்.

Trending News