தமிழ் சினிமாவில் தனித்துவமான கேரக்டர்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகர் மணிகண்டன்.அந்த வகையில், தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘மக்கள் காவலன்’படம் வெளியாகும் முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.
அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், அநீதிக்கு எதிராகப் போராடும் மக்களின் பாதுகாவலராக மணிகண்டன் நடித்துள்ளார். வெளியான போஸ்டர்களில் அவரது கெட்டப்பும் ,கேரக்டரின் தீவிரமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளன. வழக்கமான கேரக்டர்களில் இருந்து மாறுபட்டு,ஒரு வலிமையான ஆக்ஷன் கேரக்டரில் மணிகண்டன் தோன்றுவது இப்படத்தின் முக்கியமான சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் பா. ரஞ்சித் இப்படத்தை வழங்குகிறார். மேலும், இப்படத்தில் வாகை சந்திரசேகர், திவ்யா ஸ்ரீபாதா உள்ளிட்ட பலரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். நீதி, போராட்டம், மக்களின் உரிமைகள் மற்றும் அநீதிக்கு எதிரான எதிர்ப்பு போன்ற அம்சங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து டிசம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். படத்தின் சில சீன்கள் தொடர்பாகத் சென்சார் போர்டின் ஆய்வும் கவனம் பெற்றுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்கள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
புதிய அவதாரத்தில் மணிகண்டனைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை ‘மக்கள் காவலன்’படம் எந்த அளவுக்குப் பூர்த்தி செய்யும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.




