தமிழ் சினிமாவில் நாடகத்துறையின் பின்னணியிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்கள் பலர். அந்த வரிசையில் ஆச்சி மனோரமாவும் நாடகப் பின்னணியில் இருந்து வந்தவர் தான். கிட்டத்தட்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார் மனோரமா.
தமிழ் சினிமாவில் 1958 -ல் மாலையிட்ட மங்கை என்ற படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக மனோரமா அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என பல மொழிகளில் 1300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மனோரமா ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததால் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார்.
ஆரம்பத்தில் மனோரமா நாடகங்களில் நடிக்கும் போது அண்ணா, கலைஞர் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனால் சினிமாவிலும் பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தார் மனோரமா. அதேபோல் கொஞ்சும் குமரி என்ற படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார்.
ஆனால் மனோரமா கதாநாயகியாக நடித்த படங்கள் எதுவும் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. முதல் படத்திலேயே நகைச்சுவை நடிகையாக போட்டதால் கடைசிவரை நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தார். அப்போதைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமே நகைச்சுவை நடிகர்களாக இருந்தனர். பெண்கள் நகைச்சுவை நடிகையாக இருந்தாலும் ஒரு சில காட்சிகள் மட்டுமே வருவது போல் கதை அமைந்திருக்கும்.
ஆனால் அதை மாற்றி தனி அடையாளம் படைத்தவர் ஆச்சி மனோரமா. தற்போது தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை நடிகைகள் வருவதற்கு அடித்தளம் போட்டவர் மனோரமா. ஆனால் சினிமாவில் ஒரு பெரிய ஹீரோயின் ஆகவேண்டும் என்ற மனோரமாவின் கனவு கடைசி வரை நிறைவேறவில்லை. இதை ஜெயலலிதாவிடம் பலமுறை சொல்லி உள்ளாராம் மனோரமா.
ஏனென்றால் ஜெயலலிதாவும், மனோரமாவும் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். ஜெயலலிதா மிக முக்கியமான திருமண நிகழ்வுகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் மட்டுமே செல்வார். மனோரமா இறந்தபோது பல மாதங்களாக ஜெயலலிதா உடல்நிலை குன்றியிருந்த நிலையிலும் மனோரமாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.