தான் நடிக்கும் படங்களின் மூலம் மக்களுக்கு ஒரு நல்ல கருத்தை கூறுபவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அதுமட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் அவர் பல பேருக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர். இதனால் தான் அவரை தமிழக மக்கள் இன்றும் ஒரு சிறந்த தலைவராக வைத்து கொண்டாடி வருகின்றனர்.
மேலும் தன்னை தேடி வருபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்த அவர், தன் முதுகில் குத்திய நபர்களை கூட மன்னிக்கும் பழக்கம் கொண்டவர். அப்படி அவர் பகையை மறந்து மன்னித்த இரண்டு நபர்களைப் பற்றி காண்போம்.
சாண்டோ சின்னப்ப தேவர்: தேவர் பிலிம்ஸின் உரிமையாளரான அவர் எம்ஜிஆரை வைத்து பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு சிறந்த நட்பு இருந்தது. அப்படி இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் தாய்க்குப் பின் தாரம்.
எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்து அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இந்த திரைப்படத்தில் தான் அவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. அதாவது இந்த திரைப்படத்தை சின்னப்ப தேவர் தெலுங்கில் டப் செய்து வெளியிட்டார். இதை கேள்விப்பட்ட எம்ஜிஆர் அது எப்படி என்னைக் கேட்காமல் செய்யலாம் என்று அவருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
பதிலுக்கு சின்னப்ப தேவரும், தாய்க்குப்பின் தாரம் படத்தில் காளையை அடக்கும் கிளைமாக்ஸ் காட்சியில் எம்ஜிஆர் சரியாக படப்பிடிப்புக்கு வராததால் எம்ஜிஆர் போன்ற டூப் வைத்து அந்த காட்சி படமாக்கப்பட்டது. இதனால் எங்களுக்கு வசூல் தடைபட்டது என்று கூறி எம்ஜிஆருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த பிரச்சனை தான் அவர்கள் இருவரும் பிரிவதற்கு காரணமாக இருந்தது. அதற்கு பிறகு சின்னப்பதேவர் வேறு நடிகரை வைத்து படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு எம்ஜிஆர் ஒரு விழாவில் சின்னப்ப தேவரை சந்தித்தார். அப்போது அவர்கள் இருவரும் பேசி சமாதானம் ஆகி ஒன்று சேர்ந்தனர். அதன்பிறகு எம்ஜிஆர் தேவர் பிலிம்ஸ் காக தாய் சொல்லை தட்டாதே போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.
எம் ஆர் ராதா: இவர் எம்ஜிஆருடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர்களுக்குள் இருந்த நட்பு சிறு பிரச்சினையால் பிளவுபட்டது. அதாவது சினிமாவில் எம் ஆர் ராதாவுக்கு படவாய்ப்புகள் குறைந்து போனது.
இதற்கு எம்ஜிஆர் தான் காரணம் என்று கருதிய எம் ஆர் ராதா அவரை நேரில் சென்று பார்த்து இதுகுறித்து கோபமாக பேசியுள்ளார். அப்போது எழுந்த வாக்குவாதத்தில் எம் ஆர் ராதா, எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்டு விட்டார். ஆனால் அதில் இருந்து அதிர்ஷ்டவசமாக எம்ஜிஆர் உயிர் தப்பினார்.
மேலும் இந்த காட்சியைப் பார்த்தவர்கள் கூறிய சாட்சியின் பெயரில் எம் ஆர் ராதாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் இருவரும் எந்த சந்தர்ப்பத்திலும் சந்தித்துக் கொள்ளவில்லை. பல வருடங்களுக்கு பிறகு எம்ஜிஆர் ஒரு திருமண நிகழ்ச்சியில் எம் ஆர் ராதாவை சந்தித்தார். அப்பொழுது எம்ஜிஆர் அந்த பகையை மறந்து அவரிடம் பேசினார்.
இது அங்கு இருந்த பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. தன்னை கொல்ல வந்த ஒருவரை கூட மன்னித்து நட்பாக பேசிய எம்ஜிஆர் மக்கள் மத்தியில் உயர்ந்த மனிதராக பார்க்கப்பட்டார். இந்த குணம் தான் அவர் மூன்று முறை முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம்.