பெரும்புகழ் மற்றும் பணத்தின் உச்சத்தில் இருந்து கீழே இறங்கிய பிரபலங்களை பற்றி இந்த தொடர் கட்டுரையில் பார்க்கிறோம். அந்த வகையில் நாம் இப்போது பார்க்க போகும் பிரபலம், மைக்கல் ஜாக்சன்.
மைக்கல் ஜாக்சன்: பாப் இசை உலகின் முடிசூடா மன்னன், மைக்கல் ஜாக்சன் அவர்கள். தனது இசையாலும், அதிசிய நடனத்தாலும் பல இளம் நெஞ்சங்களை கட்டிப்போட்ட பெருமைக்கு சொந்தக்காரர். யாரும் எண்ணிப்பார்க்க இயலாத அளவிற்கு பணமும் புகழும் பெற்றார். வாழ்க்கையை முடிந்தவரை அவர் இஷ்டம் போல வாழ்ந்தார். 50 வயதிலேயே இறந்தும் போனார்.
ஆரம்ப காலம்: மைக்கல் ஜாக்சன், ஜாக்சன் குடும்பத்தின் எட்டாவது வாரிசு. வசதியான குடும்பம் அல்ல அவரது குடும்பம். கஷ்டங்களுக்கு இடையேயும் மொத்த குடும்பத்திற்கே இசையின் மீது ஈடுபாடு அதிகம். அதன் காரணமாகவே 5 சகோதர சகோதரிகள் ஒன்று சேர்ந்து ஜாக்சன்ஸ் என்னும் பெயரில் இசைக்குழு நடத்தினர். காலப்போக்கில் மைக்கல் மட்டும் தனியாக இசைக்கோர்வை, பாடல்கள் எழுதி தனியாக இசை ஆல்பங்கள், கச்சேரிகள் நடத்த ஆரமித்தார். உடன் தனது நடனத்திறமைகளையும் வளர்த்துக்கொண்டார்.
அவரது பயணம்: 1971-ஆண்டு தனிப்பாடகராக தொடங்கிய அவரது வாழ்க்கை மிகப்பெரும் வளர்ச்சி பெற்றது. அவரது பாடல்கள் புதுமையாகவும், கேட்க புது ரத்தம் பாய்ச்சியது போலவும் இருந்தது. இவருக்கு முந்தைய மாபெரும் இசைக் கலைஞரான எல்விஸ் ப்ரெஸ்லியின் இசையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. அவர் இசையில் ‘ஆஃப் தி வால்’, ‘பீட் இட்’ ‘திரில்லர்’ போன்ற இவரது இசை ஆல்பங்கள் பெருமளவில் விற்பனையில் சாதனை புரிந்தன. ஐந்தே வருடங்களில் பல மில்லியன் டாலர்களை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டார்.
பன்முகத்தன்மை: மைக்கல் ஜாக்சன் வெறும் பாடகராக மட்டும் அல்லாமல், நன்றாக நடனமாடும் திறமையும் பெற்றிருந்தார். அதற்காக அவர் கடுமையாக உழைத்தார். அதன் காரணமாகவே பாடகர், டான்சர் ஜெப்ரியிடம் இருந்து மூன்வாக் நடனத்தை கற்றுக்கொள்ள முடிந்தது. மேலும் அவர் தனது இசை ஆல்பங்களுக்கு தானே பாடல் வரிகளையும் எழுதினார். பின்னாட்களில் நவ நாகரிக ஆடைகளை அறிமுகம் செய்யும் அளவுக்கு புகழ் பெற்றார். அவர் அணிந்தார் என்பதற்காகவே பல பிராண்டுகளின் விலைகள் கன்னாபின்னாவென்று கூரை ஏறின. அத்தகைய பன்முகத்தன்மை கொண்டவர் மைக்கல் ஜாக்சன்.
உச்சம் தொட்ட புகழ்: 80களின் இறுதியும், 90களின் ஆரம்பமும் அவரது பொற்காலம் எனலாம். அவர் வெளியிட்ட டேஞ்சரஸ், திரில்லர், பீட் இட் போன்ற இசை ஆல்பங்கள் அமெரிக்க, ஐரோப்பா மட்டுமல்லாமல் உலகம் முழுக்க பிரபலம் ஆனது. இந்தியாவிலும் அவருக்கென தனி ரசிகர்கூட்டம் உருவானது. திரில்லர் இசை ஆல்பம் தான் உலகின் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஆல்பம் என்ற பெயர் பெற்றது. பில்லி ஜீன் என்ற பாடலை மேடையில் பாடும்போது தான் அவர் மூன் வாக் எனப்படும் நடன அசைவை நிகழ்த்திக்காட்டினார். அந்த அதிசயத்தை பார்த்தவர்கள் அது உண்மை என்று நம்ப கொஞ்ச நேரம் பிடித்தது என்பர். அமெரிக்க அதிபர் அழைத்து சிறப்பிக்கும் அளவுக்கு அவர் புகழ் பெற்றார் என்பதே அவரது சிறப்பை பறைசாற்றும்.
சரும பாதிப்பு: எந்த அளவுக்கு புகழும் பணமும் மைக்கல் ஜாக்சன் பெற்றாரோ அதே அளவுக்கு அவர் சர்ச்சையும், அதிருப்தியும் பெற்றார். ஆரம்பத்தில் அவரின் பாடல்கள் கறுப்பினத்தவரின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டது. காலப்போக்கில் அந்த பிம்பம் உடைய ஆரமித்தது. அதற்கு ஏற்றார் போல விட்டிலிகோ என்ற சரும நோயால் பாதிக்கப்பட்ட மைக்கல், தோலின் நிறத்தை இழந்து வெளிர் நிறமாக மாறத்தொடங்கினார். ஆங்காங்கே தென்படும் இந்த குறைபாட்டை போக்க அடிக்கடி அவர் ப்ளீச் செய்தும்கொண்டார். தான் அதை விரும்பி செய்வதில்லை, மக்கள் தன்னை விமர்சிப்பதை ஏற்க முடியாமல் செய்வதாக அவர் ஒப்புக்கொண்டார். இந்தியாவில் கூட அவர் அதிகமுறை பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து தான் வெள்ளை நிறத்தை பெற்றார் என்ற தவறான தகவல் உண்டு.
சர்ச்சைகளின் நாயகன்: இப்படி பெரும் பணமும் புகழும் கொண்ட மைக்கல் ஐசக்சன் வீழ்ந்தது செக்ஸ் புகாரால். அதுவும் ஓரினசேர்க்கை சர்ச்சை காரணத்தால். மேலும் இந்த குற்றத்தை அவர் சிறார்களிடம் நிகழ்த்தியது தான் அவரது புகழ் மங்க தொடங்கியதற்கு முக்கிய காரணம். உலகம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 1993-ஆம் ஆண்டு அவரது நண்பரின் மகனிடமும், பின்னர் 2005-ஆம் ஆண்டும் இந்த குற்றத்தை செய்தார் என்று சர்ச்சைகள் கிளம்பின. ஆனால் ஒருமுறை கூட போலீசாரால் குற்றத்தை நிரூபிக்க இயலவில்லை. ஜாக்சன் கோர்ட்டுக்கு வெளியே இதனை சுமூகமாக முடித்துக்கொண்டார் என்று கூறுவார்கள்.
பாப் கிங்கின் மறைவு: 2000ங்களில் அவரது ஆல்பங்கள் பெரிதாக போகவில்லை. மேலும் பல இசைக்கலைஞர்கள், குழுக்கள் வந்து பிரபலமடைந்த காரணங்களாலும், மக்களின் ரசனை பாப்பில் இருந்து ராப், மெலடி என்று மாறிவிட்ட காரணத்தாலும் இவரால் பழைய புகழை பெற முடியவில்லை. பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ், மடோனா, பிரிட்டனி ஸ்பியர்ஸ் என்று பெரிய கூட்டமே வளர்ந்துவிட்ட காரணத்தால், தனது புகழை மீட்டெடுக்க வேண்டி ‘திஸ் ஐஸ் இட்’ என்னும் புதிய ஆல்பத்திற்காக கடுமையாக உழைத்தார் மைக்கல். ஆனால் 50 வயதில் அவர் யாரும் எதிர்பாரா வண்ணம் மரணமடைந்தார். அளவுக்கு அதிகமாக ப்ரொபொபோல் என்னும் மருந்தை அவர் பயன்படுத்தியது தான் காரணம் என்று அறியப்பட்டது.
மாபெரும் இசைக்கலைஞன் புகழ் கெட்டு மடிந்தும் போனார். இருந்தாலும் இறந்தாலும் அவர் புகழ் இருக்கும். எத்தனை முறை கேட்டாலும் டேஞ்சரஸ், திரில்லர், பீட் இட் போன்ற ஆல்பங்கள் சலிப்பு அளிப்பதில்லை.