நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்த படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால், அதன் இரண்டாம் பாகத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வெளியான பிறகு எதிர்பார்த்த அளவிலான வரவேற்பையும் வசூலையும் இப்படம் பெறவில்லை என்பது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.
முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். நயன்தாராவுடன் ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், படத்தின் பின்னடைவுக்கு நயன்தாராவோ அல்லது தயாரிப்பு நிறுவனமோ காரணமில்லை; இயக்குநர் சுந்தர்.சி தான் முக்கியக் காரணம் என்ற விமர்சனம் வெளியாகியுள்ளது. குறிப்பாக, படத்தின் ஸ்க்ரீன் ப்ளே , காட்சியமைப்பு மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் எதிர்பார்த்த தரத்தில் அமையவில்லை என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்த விமர்சனங்களை இணையதளங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.
மேலும், இப்படத்தின் பட்ஜெட் 100 கோடிக்கும் அதிகம் எனப் பல ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. நவம்பர் 19ஆம் தேதி வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, 13 நாட்களில் இந்திய நிகர வசூல் 21.23 கோடியாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், படத்தின் தோல்விக்கு சுந்தர்.சி மட்டுமே காரணம் என்று உறுதியாகக் கூற முடியாது எனவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு, ஸ்க்ரீன் பிளே, ரிவியூகள் மற்றும் போட்டிப் படங்களின் வரவேற்பு எனப் பல காரணங்கள் வசூலைப் பாதித்திருக்கலாம் எனவும் தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் முடிவுகள் தமிழ் சினிமாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.




