விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ‘ரசிகர்களின் அன்பும், எல்லை மீறிய செயல்களும்!’ என்ற தலைப்பிலான ப்ரோமோ வெளியானபோதே, இந்த எபிசோடைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித்திருந்தது.
ஆனால், உண்மையில் நீயா நானா நிகழ்ச்சி ஒரு பக்கச்சார்பான விவாதமாகவே அமைந்தது.
இதற்கு முன்பு எத்தனையோ சாதி, மத, பாலினப் பாகுபாடுகளைப் பேசுபவர்கள் நிகழ்ச்சிக்கு வந்தபோதெல்லாம், அவர்களுக்குச் சாதகமாக நிற்காமல், அவர்களது வார்த்தைகளைக் கொண்டே அவர்களைக் கண்டித்தவர் கோபிநாத். ஆனால், இன்று அதையெல்லாம் முன்னின்று நடத்திய அவரே சில தருணங்களில் வார்த்தைகளின்றி நிற்பதைப் பார்க்க முடிந்தது.
ரசிகர் மனப்பான்மை என்பது யாரோ ஒருவரின் நலனுக்காக மட்டுமே பயன்படுகிறது என்பதில் தொடங்கி, சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து மக்கள் சிந்திக்கவிடாமல் ரசிக மனப்பான்மை தடுக்கிறது என்பது வரை பல ஆழமான கருத்துகள் எதிர்த் தரப்பினரால் முன்வைக்கப்பட்டன.
ஆனால், ரசிகர்கள் தரப்பிலோ சுற்றிச் சுற்றி ஒரே விஷயத்தை மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்கள். விவாதம் உச்சத்தை எட்டிய நேரத்தில், ஒருவர் எத்தனை வெறுப்பு வந்தாலும் அன்பை விதைப்போம் என்று சம்பந்தமே இல்லாத இடத்தில் ஒரு வசனத்தைப் பேசினார். அதைப் பார்த்த கோபிநாத்தே சற்றுத் தடுமாறியதுபோல் இருந்தது.
நிகழ்ச்சி முழுவதும் யார் எந்த நடிகரின் ரசிகர் என்று வெளிப்படையாகச் சொன்னாலும், விஜய் டிவி அத்தனை பெயர்களையும் மியூட் செய்துவிட்டது. ஆனாலும், சிலரது பேச்சுகளையும் செயல்களையும் வைத்தே அவர்கள் யாருடைய ரசிகர்கள் என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது.
ஒருவர், தான் கோயில் கட்டியிருப்பதாகக் கூறுகிறார். அவர் ரஜினி ரசிகராக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. இன்னொருவரோ, ‘இதுவரை ரசிகர் மன்றம், நாளைக்கு நாங்கள் கட்சி’ என்கிறார். அது நிச்சயம் தனுஷ் ரசிகராகத்தான் இருக்க வேண்டும். இப்படியான கருத்துகளைக் கேட்கும்போது தமிழகத்தின் எதிர்காலம் கண்முன்னே தெரிகிறது!
இருந்தாலும், ரசிகர்கள் தரப்பில் பேசிய ஒரு பெண், “நாங்கள் இதிலிருந்து எப்படி மீள்வது என்றே தெரியாமல் இருக்கிறோம்” என்று கூறியது கவனிக்கத்தக்க ஒன்று.
இந்த விவாதத்தைப் பார்க்கும்போதே நமக்கே உண்மை நிலை ஓரளவுக்குப் புரிகிறது. அப்படியிருக்க, இதையெல்லாம் பார்த்துவிட்டு ‘இது ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சி’, ‘வேண்டுமென்றே இப்படிப் பேசச் சொல்கிறார்கள்’ என்று கூறி முட்டுக்கொடுக்கும் கூட்டத்தை என்ன செய்வது?




