புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

நல்ல விமர்சனம் ஆனால் கலெக்ஷனில் மந்தம்.. நெஞ்சுக்கு நீதியின் மூன்று நாள் வசூல் நிலவரம்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. நேர்மையான போலீஸ் அதிகாரியாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் உதயநிதி எம்எல்ஏ பதவி ஏற்ற பிறகு இந்த படம் வெளிவந்து இருப்பதால் கட்சி உறுப்பினர்களுக்கும் இந்த படத்தின் மீதான ஆர்வம் அதிகமாக இருந்தது. ஹிந்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ஆர்டிக்கில் 15 என்ற திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தை போனி கபூர் தயாரித்து இருக்கிறார்.

சமூகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படத்திற்கு ஏராளமான பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. இப்படத்தை பார்த்த பலரும் உதயநிதியின் நடிப்பை பாராட்டி பல நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

இதனால் படம் வசூலில் சக்கைப்போடு போடும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது படத்தின் வசூல் சற்று மந்தமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் படத்தின் முதல் மூன்று நாட்கள் குறித்த வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் நெஞ்சுக்கு நீதி படம் முதல் மூன்று நாட்களுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 4.16 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. இந்த வசூல் நிலவரம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்னும் நாட்கள் இருப்பதால் படத்தின் வசூல் ஏறுமுகத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோக வார இறுதி நாட்களில் இந்த படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. அதிலும் இளைஞர்கள் இந்த படத்தை காண ஆவலுடன் வருவதாக கூறப்படுகிறது. அதனால் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வரும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இனி வரும் நாட்களில் வசூலில் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News