ஜூனியர் மயிலுடன் கைகோர்க்கும் அதர்வா.. சுட சுட வெளியான அப்டேட்

Actor Atharvaa: இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ்நாட்டில் பிறந்து, கோலிவுட்டில் முடிசூடா ராணி ஆக இருந்து, பின்னர் பாலிவுட் திரை உலகிற்கு சென்று அங்கேயும் வெற்றி பெற்றவர். தற்போது அவருடைய மகள் நேரடி தமிழ் படத்தில் அறிமுகமாக இருப்பதாக அப்டேட்டுகள் வெளியாகி இருக்கிறது.

ஸ்ரீதேவியின் மறைவிற்குப் பிறகு அவருடைய கணவர் போனி கபூர், நடிகர் அஜித்குமாரின் வலிமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவருடைய மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தி சினிமா உலகில் வளர்ந்து வரும் ஹீரோயினாக இருக்கும் நிலையில், லவ் டுடே பட ஹீரோ பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஆனால் இப்போதைக்கு ஜான்வி கபூர் தமிழ் சினிமாவில் நடிப்பதாக இல்லை என போனி கபூர் திட்டவட்டமாக மறுத்திருந்தார். இந்நிலையில் ஸ்ரீதேவியின் மகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக இப்போது அப்டேட் வெளியாகி இருக்கிறது. ஆனால் அது ஜான்வி கபூர் இல்லை. அவருடைய தங்கை குஷி கபூர் தான் இப்போது கோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

லைக்கா ப்ரொடெக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் அசோசியேட் டைரக்டர் இந்த படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பது ராக்ஸ்டார் அனிருத் தான். படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட இருக்கிறதாம்.

நடிகர் அதர்வா முரளியின் சினிமா கேரியரில் இந்த படம் தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமாகும். மேலும் இந்த படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீதேவியின் மகள் அறிமுகமாகும் இந்த படத்தில் அதர்வா நடிக்க இருப்பது இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

ஸ்ரீதேவியின் மறைவிற்குப் பிறகு அவருடைய மூத்த மகள் ஜான்வி கபூர் தமிழ் சினிமாவிற்கு வர வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் தற்போது குஷி கபூர் தான் தமிழ் சினிமாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார். இவர் ஸ்ரீதேவியின் அளவுக்கு பேர் வாங்குவாரா என படம் ரிலீஸ் ஆனால் தான் தெரியும்.